கரூர்: பரமத்தி அருகே குப்பம் காளிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகநாதன்(55) என்பவர் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பரமத்தி, தென்னிலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்ட விரோதமாக இயங்கி வரும் கல்குவாரிகள் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் உள்ளிட்டோர் உடன் இணைந்து மாவட்ட ஆட்சியரிடமும் மாவட்ட கனிமவளத்துறை அலுவலர்களிடமும் புகார் அளித்து வந்தார்.
சட்ட விரோத கல்குவாரிகள்: இதனிடையே கரூர் மாவட்ட கனிமவளத்துறை இணை இயக்குநர் ஜெயபால் தலைமையிலான, கனிமவளத்துறை அலுவலர்கள் கடந்த செப்.9 ஆம் தேதி தென்னிலை அருகே செல்வகுமார்(39) என்பவருக்கு சொந்தமான அன்னை கல் குவாரி சட்ட விரோதமாக இயங்கியதை கண்டறிந்து குவாரிக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
தடுத்த சமூக ஆர்வலர் கொலை: இதனிடையே அடுத்த நாள் கடந்த செப்.10 ஆம் தேதி பரமத்தி அருகே காரூடையாம்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சமூக ஆர்வலர் ஜெகநாதன்(55) மீது மினி லாரி ஒன்று மோதிய விபத்தில் சம்பவ இடத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த க.பரமத்தி போலீசார் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஜெகநாதனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இதனிடையே அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன் தலைமையில் சமூக ஆர்வலர்கள், உயிரிழந்த ஜெகநாதனின் குடும்பத்தாருடன் இணைந்து உடலைப் பெற மறுத்து நேற்று (செப்.11) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னணியில் கூலிப்படை: தொடர்ந்து கரூர் மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் உத்தரவின் பேரில், அரவக்குறிச்சி டிஎஸ்பி முத்தமிழ்செல்வன் தலைமையிலான இரண்டு தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், கூலிப்படையினர் சமூக ஆர்வலரை லாரி ஏற்றி கொலை செய்ததைக் கண்டறிந்தனர். இதன் தொடர்ச்சியாக பின் நேற்றிரவே, ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கூலிப்படை தலைவன் காவனூர் ரஞ்சித்(44), மினி லாரி ஓட்டுநர் சக்திவேல் (24) மற்றும் கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார் ஆகிய மூவரை கைது செய்தனர்.
குடும்பத்தில் ஒருவருக்கு வேலை தருக: இதனிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் க.பரமத்தி கடைவீதியில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூக நல அமைப்புகள் இணைந்து சுற்றுச்சூழல் சமூக ஆர்வலர் ஜெகநாதனை கொலை செய்த குற்றவாளிகளுக்கு காவல்துறை உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும், உயிரிழந்த ஜெகநாதன் குடும்பத்திற்கு அரசு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மூவர் கைது: இதனைத்தொடர்ந்து, கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று (செப்.12) இரண்டாவது நாளாக உயிரிழந்த சமூக ஆர்வலர் ஜெகநாதன் உடற்கூராய்வுக்குப் பின், உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்து ஜெகநாதனின் குடும்பத்தார், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் இணைந்து இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பொழுது செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன், 'உயிரிழந்த ஜெகநாதனின் இறப்பு குறித்து கடந்த 2 நாட்களாக நடத்திய போராட்டத்தின் விளைவாக கல்குவாரி உரிமையாளர், கூலிப்படையைச் சேர்ந்த ரஞ்சித் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.
தொடரும் போராட்டம்: விபத்து நடைபெற்றதாகக் கூறப்பட்ட இடத்தில் திட்டமிட்டு விவசாயி ஜெகநாதனை வாகனம் ஏற்றிக்கொன்றது காவல்துறை விசாரணையில் உறுதியாகி உள்ளது. மேலும், இதில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதால் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடும் இயற்கை வளத்தை காப்பாற்றப் போராடி உயிர் நீத்த ஜெகநாதன் குடும்பத்தாருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும் இல்லாவிட்டால் தொடர்ந்து, உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.
கல்குவாரி மரணங்கள்-தனி விசாரணை குழு அமையுங்கள்: கம்யூனிஸ்ட் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்ட நிலையில் மற்ற அரசியல் கட்சிகளும் இணைந்து போராட முன்வர வேண்டும். கல்குவாரி மரணங்கள் குறித்து தனி விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும் என ஏற்கனவே, கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது நடைபெற்ற ஜெகநாதனின் படுகொலை சம்பவத்தில் தனி ஒரு கல் குவாரி உரிமையாளர் மட்டும் இருப்பதாகத் தெரியவில்லை. இதில் மற்ற கல் குவாரி உரிமையாளர்களும் சம்பந்தப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது.
2ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்: எனவே, விரைந்து நீதி கிடைத்திட மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உயிரிழந்த விவசாயி ஜெகநாதன், திமுகவில் கிளைச்செயலாளராகப் பதவி வகித்தார். ஆளுங்கட்சியைச் சேர்ந்த கிளைச் செயலாளர் ஒருவர் இயற்கையைக் காப்பாற்றப் போராடியதற்கு படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆனால், இதுவரை அரசு எவ்வித நிவாரணமும் அறிவிக்கவில்லை. தொடர்ந்து நாளையும் (செப்13.) மூன்றாவது நாளாக உடலை வாங்க மறுத்து காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது' எனத் தெரிவித்தார்.
இவ்வாறாக, கரூர் அருகே கல்குவாரிக்கு எதிராகப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச்சென்ற 10 வயது சிறுவன் விபத்தில் உயிரிழப்பு