கரூர்: கடவூர் வட்டத்திற்கு உட்பட்ட தேவர்மலை கிராமம் சீத்தப்பட்டியில் கடந்த அக்டோபர் 3ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பத்தை சில மர்ம நபர்கள் இரவோடு, இரவாக வெட்டி உள்ளதாகத் தெரிகிறது. இது குறித்து சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், அக்டோபர் 4ஆம் தேதி பாளையம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குளித்தலை துணைக்காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் சிந்தாமணிப்பட்டி போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து மறியல் போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர். இதனையடுத்து, ஒரு வாரம் கடந்தும் கட்சி கொடிக் கம்பத்தை வெட்டி சாய்த்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் கடவூர் ஒன்றியத்தின் சார்பில், கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் குறிச்சி சக்திவேல் என்ற ஆற்றலரசு தலைமையில் சிந்தாமணிப்பட்டி காவல் துறை அதிகாரிகளைக் கண்டித்து முற்றுகை போராட்டம் நேற்று (அக்.12) நடைபெற்றது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் புகழேந்தி முன்னிலை வகித்தார்.
சிந்தாமணிப்பட்டி போலீசாரைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பியும், ஊர்வலமாக கட்சி கொடியுடன் விசிக கட்சியினர் திரண்டதால் போலீசார் கட்சியினரைத் தடுத்து நிறுத்தி கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் புகழேந்தி அளித்த பேட்டியில், ‘கரூர் மாவட்டத்தில் சில மர்ம நபர்கள் விசிக கொடிகம்பத்தை சேதப்படுத்தி சாதிய கலவரத்தை தூண்ட திட்டமிட்டு உள்ளனர். அறவழியில் போராடி மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என விசிக கட்சி முடிவு செய்து உள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், கரூர் மாவட்டத்தில் கட்சி கொடி கம்பத்தை சேதப்படுத்தி சாதிய கலவரத்தை தூண்ட திட்டமிட்ட மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுத்து உள்ளார்.
இதையும் படிங்க:“காவிரி நீரை பெற்றுத் தர வேண்டுமென தமிழக அரசு நினைக்கவில்லை” - சீமான்