கரூர் மாவட்டம் ஆத்துப்பாளையம் நீர் தேக்கத்திற்கு தண்ணீர் வரும் சின்னமுத்தூர் தடுப்பணையை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மழை காலங்களில் வரும் நீர் ஆத்துப்பாளையம் அணைக்கு தேக்கப்பட்டு 19 ஆயிரத்து 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் அணைகுடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டுள்ளது. தற்போது நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவருவதால் உத்தரவு பெற்ற பின்னர் இந்த அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.
தமிழ்நாட்டில் இயக்கப்படுகின்ற மின்சாரப் பேருந்துகள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகரங்களிலும் மின்சார பேருந்துகள் இயக்கப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 520 மின்சார பேருந்துகள், சி-40 எனப்படும் 300 பேருந்துகள் என இந்த ஓராண்டுக்குள் மொத்தம் 820 பேருந்துகள் இயக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
போக்குவரத்து துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு 1097 கோடி ரூபாய் ஓய்வூதிய பலன் வழங்க அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் அனைவருக்கும் வழங்கவதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுத்துள்ளார்." என்றார்.