கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதி புகலூர் வட்டத்திற்குட்பட்ட அத்திப்பாளையம் ஊராட்சி வல்லாகுளத்துப்பாளையம் பகுதியில் நான்கு தலைமுறைகளாக வசிக்கும் பட்டியலின அருந்ததியர் மக்களுக்கு சொந்தமான சுடுகாட்டில், அத்திப்பாளையம் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில், சுடுகாடுக்கு தகனம் செய்யும் எரிமேடை, சுற்றுச்சுவர் இல்லாத சுடுகாடு மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஜூலை 27ம் தேதி அப்பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவரின் தந்தை உடலை அடக்கம் செய்ய சென்றபோது, சுடுகாடு முழுவதும் சுற்றுச்சுவர் இல்லாததால் ஓடை நீரினால் சூழப்பட்டு இருந்துள்ளது. வேறு வழி இல்லாத காரணத்தினால் உடலை அடக்கம் செய்வதற்கு மக்கள் குழி தோண்டினர். உடலை அடக்கம் செய்வதற்காக அவ்விடத்திற்கு வந்து பார்த்த பொழுது குழி முழுவதும் நீர் நிரம்பி இருந்தது. மக்கள் நீரை வெளியே இறைத்து அடக்கம் செய்ய முயற்சி செய்தனர். ஆனால் தண்ணீர் ஊறிக் கொண்டே இருந்ததால் பொதுமக்கள் விறகினை வைத்து எரியூட்டி அடக்கம் செய்தனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 29ஆம் தேதி கோரிக்கை மனு அளித்தனர். இது தொடர்பான செய்திகள் உடன் ஈடிவி பாரத் செய்திகளில் விரிவான செய்தி வெளியாகி இருந்தது. இந்நிலையில் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அறிவுறுத்தலின் பேரில் புகலூர் வட்டாட்சியர் முருகன், க.பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையிலான அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் விசாரணை நடத்தினர்.
மேலும், விரைவில் சுடுகாடு அமைந்துள்ள பகுதியில் முட்புதர்கள் அகற்றப்பட்டு, சுற்றுச்சுவர் மற்றும் தண்ணீர் டேங்க், தகன மேடை அமைத்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் மக்களிடம் உறுதியளித்து சென்றுள்ளனர். அதிகாரிகளின் சொல்லளவில் உள்ள வாக்குறுதிகள் செயல் அளவில் மாற வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இது குறித்து தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் கருப்பையாவிடம் கேட்டபோது, அதிகாரிகள் ஒவ்வொரு முறையும் மக்கள் போராடுவதற்கு தயாராகும் பொழுது, தற்காலிகமான தீர்வு ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்கின்றனர். கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரிடம் கரூர் மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளில் அடிப்படை வசதிகள் அற்ற சுடுகாடு உள்ளது என்பது குறித்து பட்டியலாக வழங்கியுள்ளோம்.
ஜூலை 31ஆம் தேதி திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தாழ்த்தப்பட்டோர் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கப்படும் அரசு நிதியினை பயன்படுத்தும் விதமாக சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியில், அடிப்படை வசதிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆட்சியிலும் அடிப்படைக் கட்டமைப்புகளுக்கு ஒதுக்கப்படும் அரசு நிதி மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து செலவிடப்பட்டால், மட்டுமே அரசின் திட்டங்கள் மக்களுக்கு போய் சேரும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
இதையும் படிங்க: துப்பாக்கி முனையில் வியாபாரியிடம் ரூ.16 லட்சம் கொள்ளை.. திருப்பூரில் 7 பேர் கொண்ட கும்பல் துணிகரம்!