ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும், 19 வயது இளம்பெண் கொலைக்கு நீதி கேட்டும் கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுடன் அமராவதி பாலம் அருகில் உள்ள காந்தி சிலையின் முன்பு சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மீதான காவல் துறைத் தாக்குதலைக் கண்டித்து பதாகைகள் ஏந்தி போராட்டம் செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஜோதிமணி கூறுகையில், "ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை நடக்கவில்லை என்று பாஜக கட்சி சொல்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் மோடியின் தூண்டுதலோடு நடக்கிறது. ஹத்ராஸில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமைக்கு உண்மையான குற்றவாளிகள் யோகி ஆதித்ய நாத்தும், மோடியும்தான்.
பாஜகவினர் மனசாட்சியே இல்லாமல் பாலியல் குற்றங்கள் போன்ற வன்முறைகளுக்கு எதிராக நடந்துகொள்கின்றனர். பாஜக ஆட்சியில் பாலியல் வன்கொடுமைகள் நடக்கிறது என்றால் முதலில், பாஜகவில் உள்ளவர்கள்தான் போராட வேண்டும்.
இதன்மூலம் பாஜக மனசாட்சி இல்லாத ஒரு கொடூரமான கட்சி என்பது இதுபோன்ற வன்முறைகள் மூலம் தெரியவருகிறது" என்றார்.
இதையும் படிங்க: ஹத்ராஸ் நிகழ்வில் அநீதிக்குமேல் அநீதி - பழ.நெடுமாறன் கண்டனம்