கரூர்: சீத்தப்பட்டி காலனியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒரே வளாகத்திற்குள் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இப்பள்ளியில் பல்வேறு கிராமங்களில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஊராட்சி தொடக்கப்பள்ளி, 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை அரசு உயர் நிலைப் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு போதிய வகுப்பறைகள் இல்லாததால் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் மரத்திற்கு அடியில் அமர்ந்து படித்து வருகின்றனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இப்பள்ளிக்கு புதிய வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும் என ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இன்று வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ சிமெண்ட் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை செய்வதற்காக சீத்தப்பட்டிக்கு வந்தார். அப்போது பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் பள்ளியின் நிலைமை குறித்து அவரிடம் கோரிக்கை மனு வழங்கினர். இதனையடுத்து சட்டமன்ற உறுப்பினர் உடனடியாக பள்ளிக்கு சென்று பள்ளியை ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் ஆசிரியர்கள் மத்தியில் பள்ளியில் உள்ள குறைபாடுகளை கேட்டறிந்தார். பள்ளிக்கு வகுப்பறைகள் வேண்டும், விளையாட்டு மைதானம் வேண்டும். எனவே புதிய இடத்தில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் பள்ளியை அமைத்துக் கொடுக்க வேண்டும். மாணவர்களுக்கு போதிய கழிப்பறைகள் இல்லை, இதனால் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர் என்று தெரிவித்தனர்.
பள்ளிக்குப் புதிய வகுப்பறைகளும், கழிப்பறைகளும் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் எம்எல்ஏ உறுதி அளித்தார்.
இதையும் படிங்க: கரூர் காமராஜ் மார்க்கெட் ரூ.6.75 கோடி மதிப்பீட்டில் புதுப்பிப்பதற்கான பூமிபூஜையுடன் ஆரம்பம்!