காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் வாலாஜா பேட்டை அருகே உள்ள கடை எண்: 4109 அரசு மதுபான கடையில் பணியாற்றிவந்த விற்பனையாளர் துளசிதாஸ், ஊழியர் ராமு ஆகியோர் அக்டோபர் 4ஆம் தேதி இரவு பணியை முடித்துவிட்டு விற்பனைத் தொகையை எடுத்துச் செல்லுகையில், அவர்களை வழிமறித்த சில சமூக விரோதிகள் அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றனர்.
டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்
இதில் துளசிதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ராமு என்பவர் மேல் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த வகையில், கரூர் தொழில்பேட்டை பகுதியிலுள்ள கரூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட டாஸ்மாக் தொழிலாளர் சங்கத்தினர் டாஸ்மாக் கடைகளைத் திறக்காமல் கறுப்புப் பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்துத் தொழிற்சங்கத்தினரும் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு அரசு வேலை, 50 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்குமாறு தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கைவிடுத்தனர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு
போராட்டத்தில் ஈடுப்பட்ட ஊழியர்களுடன் கரூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ரவிச்சந்திரன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இதனையடுத்து நேற்று (அக். 5) மதியம் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகளும் திறக்கப்பட்டன.