கரூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவுக்கு பிறகு அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மற்றும் ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கும் நடவடிக்கையில் கரூர் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக இன்று கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி, கைகளை சுத்தம் செய்ய வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். பின்னர் அங்குள்ள அம்மா உணவகத்தில் முறையாக உணவு வழங்கப்படுகிறதா என்பது குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கள்ளப்பள்ளி ஊராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி, தடுப்பு நடவடிக்கையில் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: பரிசோதனைக்கு வர மறுத்த குடும்பத்தினர் - வீட்டுக்கு பூட்டு போட்ட அலுவலர்கள்!