கரூர்-கோவை சாலையில் உள்ள ஆண்டாங்கோவில் கிழக்கு, அரசு உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில், கரூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரும், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் குடும்பத்துடன் தனது வாக்கினைப் பதிவுசெய்தார்.
முன்னதாக வாக்குப்பதிவு மையத்திற்கு வருகை தந்தபோது கிருமிநாசினி, கையுறை ஆகியவற்றைப் பயன்படுத்தினார்.
வாக்காளர்கள் ஆர்வம்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எம்.ஆர். விஜயபாஸ்கர், "கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில், அதிமுக சார்பில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம்.
காலை முதலே வாக்காளர்கள் ஆர்வமாக வந்து வாக்களித்துவருகின்றனர். இதைப் பார்க்கும்பொழுது எளிமையாக நான் வெற்றிபெறுவேன் என நம்பிக்கை வந்துள்ளது. தமிழ்நாட்டில் மீண்டும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி முழு மெஜாரிட்டியுடன் பதவியேற்பார்.
இரட்டை இலை பொத்தான் இயங்கவில்லை!
கரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 221ஆவது வாக்குச்சாவடியில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் இரட்டை இலை சின்னம் பொத்தான் சரியாக இயங்காதது குறித்து புகாரளித்துள்ளோம். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை மாற்றியமைக்க உள்ளதாக, அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்" என்றார்.
தொடர்ந்து, செய்தியாளர்கள் கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் டோக்கன் வழங்கப்பட்டிருப்பது குறித்து கேட்டதற்கு, நாங்கள் டோக்கனை நம்பி இல்லை. மக்களை நம்பி உள்ளோம் எனத் தெரிவித்தார்.