கரூர் மாவட்டம் வாங்கல் அருகே உள்ள அக்கரகாரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் (36). இவரது செல்ஃபோனிற்கு ஏப்ரல் 12ஆம் தேதி வங்கி கடன் அட்டை பிரிவின் தலைமை அதிகாரி முருகன் என்ற நபர் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது முருகன் நாகராஜனிடம் கடன் அட்டையில் கிளைம் செய்யப்படாமல் இருந்த ரிவார்டு புள்ளிகளை ரொக்கமாக மாற்றி தருவதாகவும் அதற்கு தங்களது செல்ஃபோனுக்கு வரும் ரகசிய குறியீட்டு எண்ணை (ஓடிபி) தெரிவிக்கும்படி கூறியுள்ளார்.
இதனை நம்பிய நாகராஜும் ரகசிய குறியீட்டு எண்ணை கூறியுள்ளார். அப்போது அவரது வங்கி கணக்கிலிருந்து ரூ 26, 882, ரூ 6, 050 என 32 ஆயிரத்து 932 ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நாகராஜ் திரும்ப அந்த எண்ணை தொடர்புகொண்டபோது அந்த எண்னை தொடர்பு கொள்ளமுடியவில்லை.
இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நாகராஜன் வாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.