கரூர்: ஆர்எம்எஸ் தபால் அலுவலகம் முன்பு மாவட்டத்திலுள்ள பஞ்சமி நிலங்களை மீட்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி, சமநீதி கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னதாக சமநீதி கழகம், தலித் விடுதலை இயக்கம் இணைந்து தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒரு லட்சம் அஞ்சல் அட்டைகள் மூலம் பஞ்சமி நிலங்களை மீட்டுத்தரக்கோரி போராட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கட்சிகள்
அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தை தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் சா. கருப்பையா தொடங்கிவைத்து, அஞ்சல் அட்டைகளை தபால் பெட்டியில் செலுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் ச. கருப்பையா, ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளரும், கரூர் மாவட்டச் செயலாளருமான இரா. முல்லையரசு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜெயராமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், வழக்கறிஞர் புகழேந்தி, தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் தலித் ராயன், சாமானிய மக்கள் நலக் கட்சி மாவட்டச் செயலாளர் சண்முகம், மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் குணசேகரன், ஆதித்தமிழர் பேரவை கரூர் மாவட்டச் செயலாளர் பிரகாஷ்ராஜ் ஆகியோரும் உடன் இருந்தனர்.
புரட்சி பாரதம் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் எம்.பி. பெரியசாமி, மாநில அமைப்புச் செயலாளர் மணி இராசன், தமிழர் களத்தின் கரூர் மாவட்டச் செயலாளர் தமிழ் முதல்வன், சமூக செயல்பாட்டாளர் நாமக்கல் உஷா உள்ளிட்ட பல கட்சியினரும், கட்சி நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
தலித் மக்களுக்கு ஆதரவாக...
ஆர்ப்பாட்டத்தில் கரூர் மாவட்டத்திலுள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு, மீண்டும் தலித் மக்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தின்போது, செய்தியாளர்களைச் சந்தித்த தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் கருப்பையா கூறுகையில், "தமிழ்நாடு முழுவதுமுள்ள பஞ்சமி நிலங்களை தமிழ்நாடு அரசு மீட்டெடுத்து பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று (ஆக. 18) கரூரில் ஆர்ப்பாட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
ஒரு லட்சம் அஞ்சல் அட்டைகள் தமிழ்நாடு அரசுக்கு அனுப்பும் போராட்டம், தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும்" எனத் தெரிவித்தார்.
அரசு உதவும்வரை தொடர் போராட்டம்
தொடர்ந்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சமநீதி கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை அளித்த பிரத்யேகப் பேட்டியில், "தமிழ்நாட்டில் ஆங்கிலேயர் காலத்தில் 'பஞ்சமர்' என அழைக்கப்பட்ட பட்டியலின மக்களுக்கு 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் வழங்கப்பட்டது.
ஆனால், தற்போது தமிழ்நாட்டில் அரசு பதிவேட்டில் ஒரு லட்சம் ஏக்கர் மட்டுமே உள்ளது. தமிழ்நாட்டில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள திமுக அரசு, பஞ்சமி நிலங்களை மீட்டெடுத்து மீண்டும் பட்டியலின மக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அதுவரை தமிழ்நாட்டிலுள்ள கொங்கு மண்டலத்தில் தொடர்ந்து போராட்டம் தீவிரப்படுத்தப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை - கொடநாடு விவகாரம் குறித்து ஸ்டாலின் விளக்கம்'