கரூர் மாவட்டத்தில் நகராட்சிக்குட்பட்ட இடங்களில் 500க்கும் மேற்பட்ட ஆட்டோக்களும் 300க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்களும் இயங்கி வருகின்றன.
கச்சா எண்ணெய் விலை, கரோனா வைரஸ் தாக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் ஒரு சில ஆட்டோ ஓட்டுநர்கள் அதிகப் பணம் வசூலிக்கின்றனர். இதன் மூலம் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசு விதிமுறைகளை மீறி கட்டணம் வசூல் செய்யும் ஆட்டோ ஓட்டுநர்கள் கரூரில் முழு போக்குவரத்து அமல்படுத்தாத காரணத்தால் கூலி வேலைக்குச் செல்லும் ஆண்களும் பெண்களும் அதிகமாக ஷேர் ஆட்டோக்களை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது ஆட்டோ ஓட்டுநர்கள் அதிகப் பணம் வசூலிப்பதால் அவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.இது குறித்து கரூர் மாவட்ட நகர போக்குவரத்து காவல் ஆய்வாளரிடம் பேசிய பொழுது, "அதிக கட்டணம் வசூல் செய்யும் ஆட்டோக்கள் பற்றி எந்தவிதமான புகார்களும் இதுவரை கரூர் மாவட்டத்தில் வரவில்லை. ஒருவேளை அதிக கட்டணம் வசூல் செய்யும் ஆட்டோக்கள் மீதான புகார்கள் எழுந்தால், ஆட்டோக்களின் உரிமையாளரை அழைத்து எச்சரிக்கை செய்வோம். மேலும் இதுபோன்று தொடர்ந்து அரசு விதிமுறையை கடைபிடிக்காத ஆட்டோக்களின் எப்சி ரத்து செய்யப்பட்டு, ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். பொதுமக்கள் இதுபோன்ற புகார்களை போக்குவரத்து காவல் அலுவலர்கள் அல்லது வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ஆகியோரிடம் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்" எனத் தெரிவித்தார்.ஆட்டோக்கள் மீதான அதிக கட்டணம் வசூல் செய்வதாக எழுந்தப் புகாரின் அடிப்படையில் ஆட்டோ ஓட்டுநர் ரவிச்சந்திரன் என்பவர் கூறுகையில், "கரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த ஆறு மாதங்களாக ஆட்டோ போக்குவரத்து இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம். தற்போது இரண்டு மாதங்களாக ஒருசில சவாரிகள் மூலம் வாழ்க்கையை சமாளித்து வருகிறோம். சலூன் கடை, காய்கறி கடைத் தொழிலாளர்கள் விலை ஏற்றம் செய்துள்ளனர். இருப்பினும், ஆட்டோக்கள் மட்டும் அதிக கட்டணம் வசூல் செய்வதாகப் புகார் வருகிறது. கச்சா எண்ணெய் 60 ரூபாய் இருந்தாலும் 50 ரூபாய் தான். 90 ரூபாய் இருந்தாலும் 50 ரூபாய் தான் வாங்குகிறோம். அதிகமாகப் பணம் கேட்டாலும் பொதுமக்கள் தர மாட்டார்கள்" எனப் பதிலளித்தார்.ஆட்டோக்கள் கட்டண உயர்வை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் சரவணன் கூறுகையில், "ஆட்டோக்கள் அதிக கட்டணம் வசூல் செய்கின்றன. இதற்கு அரசு தலையிட்டு முறையான விலைப்பட்டியல் வழங்க வேண்டும். ஆட்டோ ஓட்டுநர்கள் அதிக வசூல் செய்வதை தடுத்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" எனக் கூறினார்.ஆட்டோவில் பயணம் செய்யும் கூலித் தொழிலாளி ஜெகநாதன் என்பவர் கூறுகையில், "அரசு 50 விழுக்காடு பேருந்துகளை மட்டுமே இயக்கி வருகிறது. இதனால் ஷேர் ஆட்டோக்களை அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றோம். கரோனா வைரஸ் பரவுவதற்கு முன்னர் ஐந்து அல்லது ஆறு ரூபாய் வரையில் பயணம் செய்தோம். தற்பொழுது பதினைந்து, பதினாறு ரூபாய் என்று கணக்கில்லாமல் கொடுத்து வருகிறோம். எனவே ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அரசு அறிவுரை வழங்கி இந்த பிரச்னையைத் தடுக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: கரோனா ஊரடங்கால் தவிக்கும் பெண் ஆட்டோ ஓட்டுநர்: உதவி செய்யுமா அரசு?