கரூர் மாவட்டம் முழுவதும் தென்னை விவசாயம் செய்துவரும் நிலையில், காவிரி நதி பாயக்கூடிய மாவட்டத்தின் சில பகுதிகளில் விவசாயிகள் சிலர் பனைமரங்களை வளர்த்துவருகின்றனர். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டத்திற்கு உட்பட்ட திருக்காம்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். மரம் ஏறும் தொழில் செய்து வருபவர் இவர், பனைமரத்தை குத்தகைக்கு எடுத்து நொங்கு விற்பனையும் செய்துவருகிறார். தற்போது, கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக தனது தொழில் முற்றிலும் முடங்கியுள்ளதாக வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து பேசிய பனைத் தொழிலாளி சேகர், "பனைப்பொருள்கள் விளைச்சல் அதிகளவு இருப்பினும், ஊரடங்கின் காரணமாக முற்றிலும் வியாபாரம் பாதித்துள்ளது. தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் மரமேறி, பனை பொருள்களை சேகரித்துவருகிறோம். இருப்பினும், நுங்கு மரத்திலேய முற்றியதால் விளைச்சல் இருந்தும் அதற்கான வருவாய் இன்றி பனைத் தொழிலாளர்கள் தவித்துவருகிறோம்.
பனை மரத்தின் சீசன் இல்லாத பொழுது ஒரு தென்னை மரம் ஏறினால் 7 ரூபாய் வீதம் ஒரு நாளைக்கு முந்நூறுலிருந்து நாநூறு ரூபாய் சம்பளம் பெற்றுவந்தேன்.ஆனால், தற்போது பலரும் பனை மரங்களையும் வெட்டி செங்கல் சூளைகளுக்கு எடுத்துச் சென்றுவருகின்றனர். மரங்களின் எண்ணிக்கை குறைந்ததால், வேலைவாய்ப்பு குறைந்துள்ளது.
இருக்கும் மரங்களைக் கொண்டு தங்களின் வாழ்வாதாரத்தை ஈடுசெய்யலாம் என எண்ணினால், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் கரூர் மாவட்டத்தைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் பனை மரத்திலிருந்து பதநீர் எடுப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பதநீர் எடுப்பதற்காவது தங்களுக்கு அனுமதியளித்தால் தங்களது வாழ்வாதாரத்தினை ஓரளவிற்கேனும் ஈடுசெய்யமுடியும்" எனக் கூறினார்.
இதையும் பார்க்க: மக்கள் நலனில் இல்லாத உத்வேகம் மதுக்கடைத் திறப்பில்- அரசை சாடிய கமல்