கரூர்: வெண்ணெய்மலை முருகன் கோயில் அருகே கரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ளது. அதன் அருகே, கரூர் சட்டப்பேரவை உறுப்பினராக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருந்தபோது, அவரது முயற்சியில் சிறுவர் விளையாட்டு பூங்காவுடன் பல்வேறு நவீன வசதிகள் கொண்ட அம்மா பூங்கா அமைக்கப்பட்டது. பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பணிகள் நிறைவு பெற்ற நிலையில் அதன் திறப்பு விழாவுக்குத் தயாராக இருந்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அமைந்த திமுக ஆட்சி காரணமாக, அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட அம்மா பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் இருந்து வருகிறது. இதுகுறித்து கரூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன், கரூர் குறைதீர்க்கும் ஆணையத்தில் அம்மா பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்க வேண்டும் என வழக்கு ஒன்று தொடுத்துள்ளார்.
இதுகுறித்து வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் ஈடிவி பாரத் செய்திக்கு அளித்த பேட்டியில், ''கரூர் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் அமைக்கப்பட்ட அம்மா பூங்கா திறக்கப்பட்டால் வெண்ணெய்மலை, வாங்கப்பாளையம், நாவல் நகர், வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறுவார்கள். ரூ.20 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட அம்மா பூங்கா திறக்கப்பட வேண்டுமென கரூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அரசு சார்பிலும் டெண்டர் விடப்பட்டு விரைவில் அம்மா பூங்கா திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட திட்டம் என்பதால் அதிகாரிகள் காலதாமதம் படுத்தி வருகின்றனர். மக்கள் வரிப்பணத்தில் செலவிடப்பட்ட திட்டம், மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், நல்ல நிலையில் உள்ள பொருள்கள் பொதுமக்கள் பயன்படுத்தும் முன்னரே வீணாகும் நிலை உள்ளது. சமீப காலமாக கரூர் நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் அரசு நிர்வாகங்களில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி, தொடரப்பட்ட வழக்குகளில் அதிகாரிகளுக்கு வழிகாட்டுதலும் அபராதமும் விதித்து வருகிறது.
எனவே வெண்ணெய்மலை அம்மா பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க நடவடிக்கை மேற்கொள்ளாத அரசு அதிகாரிகளுக்கு முன்னுதாரணமான நீதிமன்ற தீர்ப்பை விரைவில் வழங்கும். அரசும் மக்கள் வரிப்பணத்தில் செலவிடப்பட்ட அரசு பூங்கா பணிகள் நிறைவு பெற்றும் திறக்காமல் வைத்திருப்பது சரியல்ல. எனவே, கட்சிப் பாகுபாடு பார்க்காமல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அம்மா பூங்காவை திறக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதேபோல கரூர் நகர் பகுதிக்குள் உள்ள போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அம்மா புறவழிச்சாலை சேலம் தேசிய நெடுஞ்சாலை முதல் கரூர் ரயில் நிலையம் வரை அமைக்கும் பணிகள் 90 விழுக்காடு நிறைவு பெற்றும், 10 விழுக்காடு பணிகள் தார் சாலை அமைக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் உள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற கரூர் மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அம்மா புறவழிச் சாலை என்பதை கலைஞர் புறவழிச்சாலை என திருத்தம் செய்து மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அதிமுகவைச் சேர்ந்த இரண்டு மாநகராட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளியேறினர்.
அம்மா பூங்காவை திறப்பதில் அம்மா பூங்கா என்ற பெயர் மட்டுமே திமுகவினருக்கு இடையூறாக உள்ளதாக பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பொதுவான குற்றச்சாட்டாக முன்வைக்கின்றனர். அம்மா பூங்கா திறக்கப்படாமல் தாமதப்படுத்துவதன் பின்னணியில், திமுகவுக்கு துணை போகும் அரசு அதிகாரிகளால், மக்களின் வரிப்பணம் வீணாகி வருவது மட்டும் நிதர்சனமான உண்மை.
இதையும் படிங்க: பயிர்களின் நடுவே NLC-யின் கால்வாய் வெட்டும் பணி; கண்ணீரில் விவசாயிகள் - கலெக்டரின் பதில் என்ன?