கரூர்: தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன் மற்றும் காவேரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் விஜயன், சண்முகம் உள்ளிட்டோர் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் நேற்று (பிப்.20) கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த சமூக ஆர்வலர் முகிலன், 'கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி நான்கு மாணவிகள் புதை மணலில் சிக்கி உயிரிழந்ததற்கு காரணம், கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் 20 அடி முதல் 30 அடி வரை மணல் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதுதான்'.
மேலும், இது தொடர்பாக காவேரி ஆறு பாதுகாப்பு இயக்கம் ஆதாரத்துடன் பலமுறை கூறியுள்ளதாகவும், இது தவிர உயர் நீதிமன்றம் அமைத்த குழு ஆய்வு செய்தபோதும் இதனை உறுதி செய்ததாகவும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 200க்கும் மேற்பட்டோர் புதை மணலில் சிக்கி உயிரிழந்ததாக தெரிவித்தார்.
கடந்த பிப்.19 ஆம் தேதி தஞ்சாவூர் அருகே காவிரி ஆற்றில் இறங்கி குளித்த 2 பள்ளி மாணவிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் வாக்காளர்களை கவர்வதற்கு அரசியல் கட்சியினர் எத்தனையோ முறைகளை கையாண்டு வாக்கு சேகரித்து வருவதாக கூறிய அவர், காவிரி ஆற்றில் குளிக்கச் சென்று உயிரிழக்கும் அவல நிலையை மாற்ற அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
கரூர் மாவட்டத்தில் சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவிற்கு காவிரி ஆற்றில் தடுப்பு கம்பி வேலி அமைப்பதன் மூலம் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளதாக முகிலன் கூறினார். அதேபோல் சந்தேக உயிரிழப்புகள் ஏற்பட்டால், பிரேத பரிசோதனை குடும்ப உறுப்பினர்கள் அனுமதியுடன் நடத்த வேண்டும் என்பது விதி என்கிற நிலையிலும், சட்டவிரோத கல்குவாரிக்கு எதிராக போராடியதற்காக வாகனம் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட ஜெகநாதன் உடலை உறவினர்கள் அனுமதியின்றி காவல் துறை பிரேத பரிசோதனை செய்ததாக அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் மாயனூர் காவிரி ஆற்றில் உயிரிழந்த குழந்தைகளின் உடலை பெற்றோரின் அனுமதியின்றி, பிரேத பரிசோதனை நடத்தியதாக அவர் கூறினார். அதேபோல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உணவில் இரும்புத் துண்டு கிடந்ததாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த சமூக ஆர்வலர் சந்திரசேகர் என்பவரை, அரசு மருத்துவரை பணியை செய்ய விடாமல் தடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில் இரு நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
கரூர் மாவட்ட நிர்வாகம் தவறான முறையில் சென்று கொண்டுள்ளதை சுட்டிக்காட்டினால், கைது செய்து சிறைக்கு அனுப்புவது சரியான நடவடிக்கை அல்ல எனவும், இதில் தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட்டு கரூர் மாவட்ட நிர்வாகத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் தமிழ்நாட்டிற்குத் தேவையான மணல், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் என கடந்த 2017ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் தெரிவித்திருந்த நிலையில், தமிழ்நாட்டின் ஆறுகளில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு மணல் அள்ளுவதற்கு அனுமதி மறுத்தால், மணல் இறுகுவதற்கு கால அவகாசமாக இருக்கும் எனவும் கோரிக்கை வைத்தார்.
அதேநேரம் காவிரி ஆற்றில் மணல் அள்ளுவதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும், இனி காவிரி ஆற்றில் குளிக்கச் சென்று யாரேனும் உயிரிழந்தால் அதற்கு அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முகிலன், கடந்த 2017ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களுக்கு 28 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.
எனவே புதுக்கோட்டையைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவிகள் குடும்பத்திற்கும் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், காவிரி ஆற்றில் இதுவரை மூழ்கி உயிரிழந்த அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றார். மேலும் காவிரி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் எடுத்த மணல் கொள்ளையர்களின் சொத்துக்களை அரசு பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் முகிலன் கூறினார்.
இதையும் படிங்க: மாணவிகள் உடற்கூராய்வு அறிக்கை எங்கே? - கொந்தளித்த பெற்றோரின் காலில் விழுந்த ஆசிரியை!