கரூர்: நொய்யல் அருகே உள்ள அத்திப்பாளையம் புதூர் பகுதியில் நாச்சிமுத்து என்ற விவசாயி. இவர் தோட்டத்தில் கடந்த 19 ஆம் தேதி சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட்டது. அதன் பின் மாவட்ட நிர்வாகம் வனத்துறை உதவியுடன் கூண்டு வைத்தும், சிசிடிவி கேமராக்கள் பொருத்தியும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தென்னிலை அருகே தள்ளிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த விவசாயி சிதம்பரம் என்பவரது தோட்டத்தில் இருந்த 6 செம்மறி ஆடுகள் மர்ம விலங்கு கடித்து பலியாகி உள்ளது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நொய்யல் பகுதியில் இருந்து சிறுத்தை 20 கிமீ கடந்து தென்னிலை பகுதியில் நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் சிறுத்தை தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருக்கும் என்பதால் கூண்டு வைத்து பிடிக்கும் வனத்துறையின் நடவடிக்கை பின்னடைந்துள்ளது. இதனிடையே கரூர் மாவட்ட வன அலுவலர் சரவணன் தலைமையில் வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். பின்னர் உயிரிழந்த கால்நடைகளுக்கு பிரேத பரிசோதனை நடத்தினர். அதன் பின்னர் வெறி நாய் கடித்து ஆடுகள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர். இருப்பினும் அப்பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம் காரணமாக ஆடுகள் பலியாகி இருப்பதாக செய்திகள் பரவியதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தை புலியை பிடிக்க, வனத்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கை வெற்றி பெறாத நிலையில், தற்பொழுது கரூர் மாவட்டத்தில் இடம் பெயர்ந்துள்ள சிறுத்தை புலியை பிடிக்கும் நடவடிக்கையும் பின்னடைவை சந்தித்து வருகிறது. தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வனத்துறையினர் சிறுத்தை புலி விரைவில் பிடித்து, பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: Erode by-election: இளங்கோவனுக்கு ஆதரவாக மேயர் பிரியா தீவிர பிரசாரம்!