கரூர்: திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி கரூர் மாவட்டத் தேர்தல் அலுவலரான பிரசாந்த் மு. வடநேரேவைச் சந்தித்து வாக்குப்பதிவின்போது காவல் துறையினர் ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதாகப் புகார் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "நேற்று (ஏப். 5) இரவு கரூர் வெங்கமேடு திமுக தேர்தல் பணிமனையை கரூர் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர், கரூர் துணைக் கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமையில் காவல் துறையினர் அத்துமீறி அகற்றியுள்ளனர்.
மேலும் கரூர் நகராட்சிப் பகுதிகளில் 100 மீட்டர் தொலைவிலும், ஊராட்சிப் பகுதிகளில் 200 மீட்டர் தொலைவிலும் கட்சியினர் பணியாற்றத் தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது.
அவ்வாறு உரிய இடத்தில் நின்று திமுக கட்சியினரும், கூட்டணிக் கட்சியினரும் பணியாற்றினாலும் காவல் துறை அதிரடிப் படையினரைக் கொண்டு அடித்து விரட்டிவிடுகின்றனர்.
வாங்கல் வாக்குச்சாவடி மையத்தில் அதிமுக பிரமுகர் பாலமுருகன் வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டுவருவதாகத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்றபோது, அங்கு காவல் துறையும் அலுவலர்களும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
எனவே இது குறித்து கரூர் மாவட்டத் தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்துள்ளோம். அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலினை மக்கள் முதலமைச்சராக உறுதிசெய்து-விட்டனர். காவல் துறையின் இதுபோன்ற ஒருதலைபட்சமான நடவடிக்கை வருத்தமளிக்கிறது" என்றார்.
இதையும் படிங்க: 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் - டிடிவி நம்பிக்கை