கரூர்: கோயம்புத்தூரைத் தொடர்ந்து கரூரிலும் பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் நகர்ப் பகுதியில் உள்ள வடக்கு பிரதட்சணம் சாலையில் செயல்பட்டு வரும் எலும்பு முறிவு மருத்துவமனையை ரஜினிகாந்த் என்பவர் நடத்தி வருகிறார்.
மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியரின் மகள் அருகில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். பள்ளி முடிந்ததும் மருத்துவமனைக்கு வந்து, பணி முடிந்ததும் தாயுடன் வீடு திரும்புவது வழக்கம்.
மருத்துவமனை ஊழியர்கள் இடமும் அங்கு பணியாற்றும் மருத்துவர்களிடமும் சகஜமாகப் பழகிய பள்ளி மாணவி நேற்று(நவ.13) அவரது தாய் விடுமுறையில் இருந்ததால், பள்ளி முடிந்ததும் மாலை சம்பளப் பணத்தைப் பெற்றுக்கொள்ள மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
சம்பளம் பெற சென்றபோது நிகழ்ந்த அவலம்
அவ்வப்போது பள்ளி மாணவியை மருத்துவர் தனியாக அறையில் அழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட முயற்சித்ததாகத் தெரிகிறது.
இதற்கு ஒத்துழைப்பு அளிக்காத பள்ளி மாணவி மருத்துவரின் அறையில் இருந்து கூச்சலிட்டபடி வெளியே வந்துள்ளார்.
இதுகுறித்து தனது தாயிடம் நடந்ததைக் கூறி கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக, கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் புகார் அளித்தார்.
தலைமறைவான மருத்துவர்
பின்னர் இதுகுறித்து மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்ட அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் மருத்துவர் ரஜினிகாந்த் மீதும் அவரது மேலாளர் சரவணன் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
விசாரணைக்குப் பயந்து மருத்துவர் ரஜினிகாந்த் தலைமறைவாகிஇருப்பதால், மருத்துவமனை மேலாளர் சரவணனை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள தனியார் பள்ளியில் +2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், அப்பெண் தற்கொலை கொண்ட நிலையில் கரூரில் பள்ளி மாணவிக்கு மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மாணவியின் இறுதி ஊர்வலம் - கண்ணீர்விட்ட கோவை மக்கள்