கரூர்: கரூர் மாவட்டம் வெள்ளியணை காவல் நிலையத்திற்குட்பட்ட மணவாடி அருகே உள்ள கல்லுமடை மருதம்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்த சிறுவர் நித்திஷ் (13). இவர் திண்டுக்கல் கூம்பூர் கொண்டமநாய்க்கன்பட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி அரசு நடுநிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று (ஆக. 30) கரூரில் உள்ள கல்லுமடை மருதம்பட்டி காலனிக்கு விடுமுறையை கழிக்க வந்த நித்திஷ், தனது பெற்றோரிடம் தனக்கென செல்போன் ஒன்றை கேட்டு அடம் பிடித்ததாக கூறப்படுகிறது. பெற்றோர் படிப்பில் கவனம் செலுத்தும்படியும், கேம் விளையாடினால் படிப்பு கெட்டு விடும் என்ற அச்சத்தில் செல்போனை பிறகு வாங்கித் தருவதாகவும் கூறி அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.
இதனால், மன விரக்தி அடைந்த நித்திஷ், பெற்றோர் தனது சித்தியின் வளைகாப்பு விழா ஏற்பாடுகளுக்காக கரூர் சென்றபோது, வீட்டில் உள்ள சமையல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய நித்திஷின் அண்ணன் திவாகர் இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்து, பெற்றோருக்கு தகவல் கொடுத்தார்.
மேலும், நித்திஷை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்ததாக தெரிவித்ததையடுத்து, கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து வெள்ளையனை காவல் உதவி ஆய்வாளர் சத்தியப்பிரியா வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
செல்போன் மூலம் கேம் விளையாட ஆசைப்பட்டு புதிய ஆண்ட்ராய்டு செல்போன் கேட்டு அடம் பிடித்து சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை உண்டாக்கியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில்,"தற்கொலை தீர்வல்ல என்பதை இளம் வயதில் மாணவர்கள் உணர வேண்டும். எதையும் எதிர்கொண்டு நினைத்த காரியத்தை சாதிக்க வேண்டும் என்ற தைரியம் வேண்டும்.
மேலும். தற்கொலை எண்ணம் குறித்து மனநல ஆலோசனை பெற 14417 என்ற எண்ணிலும் 1098 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு கட்டணமின்றி இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்" என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மணல் பிள்ளையார் முதல் புஷ்பா பிள்ளையார் வரை - சிறப்பு புகைப்படத் தொகுப்பு