கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இயங்கிவரும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பசுபதிபாளையம் வடக்குத் தெருவைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மகள் கோமதி (17) 12ஆம் வகுப்பு படித்துவந்தார்.
இந்நிலையில், இன்று வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவி பள்ளி வகுப்பு தொடங்கும் முன்பே மயக்கம் போட்டு பள்ளி வளாகத்தில் கீழே விழுந்தார். அப்போது பணியிலிருந்த ஆசிரியர்கள் மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அவரை உடனடியாக கரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பள்ளி மாணவி உயிரிழந்தார்.
மாணவியின் உயிரிழப்பு குறித்து பள்ளி தலைமை ஆசிரியர், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், கரூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி டீன் ரோஸி வெண்ணிலா ஆகியோர் மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டனர்.
மாணவி கோமதிக்கு குறைந்த ரத்த அழுத்தம் இருப்பதால் மயக்கமுற்று அவர் நாடித்துடிப்பு குறைந்து உயிரிழந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதே சமயம், தனது மகளுக்கு எந்தவித நோயும் இல்லை, பள்ளி வளாகத்தில் தான் ஏதோ அசம்பாவிதம் நடந்துள்ளது என அவரது தாயார் மருத்துவமனை வளாகத்தில் அதிகாரிகள் விசாரணையின்போது கூறி கதறி அழுதார். மாணவிக்கு உடற்கூறு ஆய்வு செய்த பிறகே உண்மை தெரியவரும். இதனால் கோமதி பயிலும் பள்ளியிலும், மருத்துவமனை வளாகத்திலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வீட்டின் பின்புறம் இறந்து கிடந்த பள்ளி மாணவி - போலீஸ் தீவிர விசாரணை