கரூர்: திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் கரூர் 80 அடி சாலையில் நேற்று (ஜூன் 27) நடைபெற்றது. இந்த கூட்டம், கரூர் மத்திய நகர செயலாளர் கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுகவின் மேடைப் பேச்சாளர்கள் நாஞ்சில் சம்பத் மற்றும் சைதை சாதிக் ஆகியோர் கலந்து கொண்டு மேடையில் உரை ஆற்றினர்.
அப்போது பேசிய திமுக மேடைப் பேச்சாளர் சைதை சாதிக், "1957ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் வெற்றி பெற்று முதலமைச்சராக இருந்த காமராஜர், சட்டசபையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 15 பேர் எழுப்பிய கேள்விள் குறித்து விருகம்பாக்கம் பொதுக்கூட்டம் ஒன்றில் சவால் விட்டு பேசினார்.
அப்போது, எதிர் வரும் 1962 சட்டமன்றத் தேர்தலில் அரசுக்கு இடையூறாக சட்டமன்றத்தில் செயல்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 15 பேரை நிச்சயம் தோற்கடிப்பேன் என்று சவால் விட்டார். அவர் சொன்னபடியே 1962ஆம் ஆண்டில் மீண்டும் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. 14 பேர் காமராஜர் கூறியதைப் போல தோற்றனர்.
ஆனால், கருணாநிதி தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்துக்குள் சென்றார். கருணாநிதி, இந்தியாவின் கிங் மேக்கராக கருதப்பட்ட காமராஜர் விட்ட சவாலை வென்று காட்டியவர். ஏன் இதை கூறுகிறேன் என்றால், அவரைப் போன்று அமைச்சர் செந்தில் பாலாஜியை மத்திய அரச, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை மற்றும் சிபிஐ ஆகியவற்றை வைத்து மிரட்டி பார்க்கிறது.
அது ஒருபோதும் நடக்காது. ஏனென்றால் திமுக என்பது, இந்திரா காந்தி 1977ஆம் ஆண்டு அறிவித்த எமர்ஜென்சி என்னும் நெருக்கடி நிலையை அறிவித்தார். இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் எதிர்கட்சித் தலைவர்கள் 675-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அப்போது இந்திரா காந்திக்கு எதிராக அப்போதய முதலமைச்சர் கருணாநிதி தமிழ்நாட்டில் தீர்மானம் நிறைவேற்றினார்.
எமர்ஜென்சி அறிவித்த இந்திரா காந்தியைக் கண்டு அஞ்சாத இயக்கம் தான் திமுக. அவர் வழியில் வந்த தற்போதைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், பாஜகவை வீழ்த்த வலிமை வாய்ந்த தலைவராக திகழ்ந்து வருகிறார். செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட மூன்று மணி நேரத்தில், திமுக திருப்பி அடித்தால் தாங்க மாட்டீர்கள் என்று பாஜகவுக்கு சவால் விட்டார்” என கூறினார்.
மேலும் இந்த பொதுக் கூட்டத்தில் திமுகவின் மாநில சட்டக் குழு இணைச் செயலாளர் வழக்கறிஞர் மணிராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் இளங்கோ, மாணிக்கம், சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், கரூர் மத்திய கிழக்கு நகரச் செயலாளர் கோல்ட் ஸ்பாட் ராஜா, வடக்கு நகரச் செயலாளர் கணேசன், மத்திய மேற்கு நகரச் செயலாளர் அன்பரசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜி மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு: நீதிமன்றத்தில் அனல் பறந்த இருதரப்பு வாதம்!