தமிழ்நாட்டில் டிசம்பர் 27, மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி கரூர் மாவட்டத்தில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திமுக சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி, கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி ஆகியோர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர்.
பள்ளப்பாளையம், கோவிந்தம் பாளையம், வேப்பம்பாளையம், ஆத்தூர் பிரிவு, ஆண்டான்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மற்றும் தாந்தோணி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தனர்.
அப்போது பேசிய எம்.பி. ஜோதிமணி, "மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பதை அதிமுக நன்கு தெரிந்து வைத்திருக்கிறது. அதனால்தான் மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் நமக்கு வர வேண்டிய 11 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மத்திய அரசிடம் தேங்கியுள்ளது. அதிமுகவின் உருட்டல் மிரட்டலுக்கு மக்கள் பயப்பட மாட்டார்கள். அதனை மக்களவைத் தேர்தலிலேயே பார்த்துவிட்டோம்.
போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் சொந்த தொகுதியிலேயே 250 வாக்குகள் அதிகமாக பெற்றுவிட்டேன். வாக்கு சேகரிக்க உரிமையுள்ளது மிரட்டுவதற்கு உரிமை இல்லை" என்றார்.
இதையும் படிங்க: மருத்துவக் கல்லுாரி மாணவர்களுக்கு 'காவலன் செயலி' விழிப்புணர்வு!