கரூர் தாந்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரிக்கு அம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் தினந்தோறும் பேருந்தில் பயணம் செய்துவருகின்றனர். இதனால் கல்லூரிக்கு அருகில் மாணவர்கள் நிற்பதற்காக நிழற்கூடம் அமைத்து தர வேண்டும் என்று நீண்ட நாட்களாக கல்லூரி சார்பிலும் மாணவ,மாணவிகள் சார்பிலும் தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்று தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் நவீன நிழற்கூடம் அமைக்கும் பணிக்காக இன்று பூமி பூஜையை தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள், கரூர் நகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.