தமிழ்நாடு வருவாய்த் துறை மாநிலத் துணைத் தலைவர் மங்கள பாண்டியன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட வருவாய் அலுவலர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை மற்றும் கடவூர் வட்டத்தில் சமூகநலப் பாதுகாப்புத் துறை தனி வட்டாட்சியராகப் புகழேந்தி என்பவர் பணியாற்றிவருகிறார். இவரது அலுவலகத்தில் குளித்தலை துணை ஆட்சியர் அப்துல் ரஹ்மான், கடந்த 10 நாள்களுக்கு முன்பு தணிக்கை நடத்தியுள்ளார்.
அப்போது, நலத்திட்ட உதவி பெறுவது தொடர்பான 16 மனுக்கள், அலுவலக ஆய்வின்போது காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதைக் காரணம் காட்டிய குளித்தலை துணை ஆட்சியர் அப்துல் ரகுமான், கடந்த 24ஆம் தேதிமுதல் தனி வட்டாட்சியர் புகழேந்தி, முதுநிலை வருவாய் ஆய்வாளர் குணாவிக்னேஷ் ஆகிய இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளார்.
துணை ஆட்சியர் முறையாக விசாரணை மேற்கொள்ளாமல், அவரது பதவி அதிகாரத்தை வைத்து முடிவுசெய்திருப்பதாக வருவாய்த் துறை அலுவலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும், அவருடைய தன்னிச்சையான நடவடிக்கையைக் கண்டித்தும், இந்தத் தற்காலிக பணியிடை நீக்கத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் கோரிக்கைவைத்து ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் மேற்கொண்டுவருகின்றனர்.
துணை ஆட்சியரின் உத்தரவைத் திரும்பப்பெற வேண்டும், தற்காலிக பணியிடநீக்க உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் - இல்லையென்றால் வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் அடுத்தடுத்து போராட்டங்கள் தொடரும் என எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: எண்ணூரில் 7 கிராம மீனவ மக்கள் கவன ஈர்ப்பு போராட்டம்!