கரூர்: தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம், அந்த சமூகத்தின் மாநில தலைவர் அம்பலத்தரசு தலைமையில் இன்று (ஏப்ரல் 2) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் குப்புசாமி வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரையர் சங்கத்தின் மாநில தலைவர் அம்பலத்தரசு, "1996 ஆம் ஆண்டு முத்தரையர் சமூகத்தின் 29 உட்பிரிவுகளை முத்தரையர் என்று ஒரே பெயரில் அழைக்க தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. ஆனால், அந்த அரசாணையை இதுவரை அமல்படுத்தப்படவில்லை. ஆகவே, அந்த அரசாணையை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
வன்னியர் சமூகத்திற்கு தனி இட ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு வழங்கி உள்ளது. இது சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதுபோல முத்தரையர் சமூகத்திற்கும் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். வன்னியர் சமூகம் தனி சாதியாக இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டிருந்தனர். ஆனால், முத்தரையர் சமூகம் பல்வேறு பிரிவுகளாக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட பிரிவுகளில் பிரித்து வைக்கப்பட்டுள்ளனர். அவற்றை ஒரே தொகுப்பாக இணைத்து இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
குறிப்பாக அம்பலக்காரர், சேர்வை பிரிவினர் எம்பிசி, டிஎன்டி பிரிவில் உள்ளனர். ஏனைய பிரிவினர் பிற்படுத்தப்பட்டோர் (பி.சி) பிரிவில் உள்ளனர். அனைவரையும் ஒரே தொகுப்பாக சேர்த்து தனி இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.
கர்நாடகா, ஆந்திரா போன்ற பிற மாநிலங்களில் உள்ளதை போல இட ஒதுக்கீடு ஏ, பி, சி, டி என பிரித்து வழங்க வேண்டும். மேலும் முத்துராஜா, முத்தரையர், முத்திரிய நாயுடு பழையகாரநாயக்கர் உள்ளிட்ட சமூகத்தை உடனடியாக எம்பிசி பிரிவில் சேர்க்க வேண்டும். தமிழ்நாட்டில் சாதிவாரியான கணக்கெடுப்பை உடனடியாக நடத்திட வேண்டும். அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம்" என கூறினார்.
இதையும் படிங்க: கலாஷேத்ரா பாலியல் தொல்லை வழக்கு - கேரளா விரைந்தது தனிப்படை போலீஸ்!