கரூர்: நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் துண்டிக்கப்பட்டு, தீவு போல மழைநீர் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ள நீர் வடியாத பகுதிகளில், முகாம்களில் பாதுகாப்பாக மக்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இதற்காக தமிழக அரசு போர்க்கால அடிப்படையில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, கரூர் மாநகராட்சி நிர்வாகம் ரூ.21 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தனர்.
இதன் தொடர்ச்சியாக, நேற்று (டிச.21) இரவு கரூர் தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை சார்பில், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு 24 லட்சம் ரூபாய் மதிப்பிலான 25 ஆயிரம் போர்வைகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
மேலும், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மீ.தங்கவேல், மாவட்ட நிர்வாகம் சார்பில் கன மழையினால் பாதிக்கப்பட்ட துத்துக்குடி மக்களுக்கு 7 லட்சத்து 76 ஆயிரத்து 400 ரூபாய் மதிப்பிலான பால், போர்வைகள் மற்றும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனத்தை அனுப்பி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் கன மழையினால் பாதிக்கப்பட்ட துத்துக்குடி மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் பொருட்டு, கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர் சங்கம், கரூர் ஜவுளி உற்பத்தியாளர் சங்கம், ஆசின் ஃபேப்ரிக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர், ஏற்றுமதியாளர் மற்றும் அனைத்து டெக்ஸ்டைல் உரிமையாளர் சங்கம் மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
அதில் இரண்டாயிரம் தண்ணீர் பாட்டில்கள், 300 பிரட் பாக்கெட்டுகள், 21 ஆயிரம் பிஸ்கட் பாக்கெட்டுகள், 150 பாக்கெட் அரிசி, 4 ஆயிரத்து 34 பெட்ஷீட், 2 ஆயிரத்து 300 நாப்கின், 400 நைட்டிகள், ஆயிரம் கொசுவத்தி சுருள், ஆயிரம் டவல்கள் என 9 லட்சத்து 29 ஆயிரத்து 100 ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன், தனித்துணை ஆட்சியர் (சபாதி) சைபுதீன், கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர் சங்கம் கௌரவத் தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து, கரூர் ஜவுளி உற்பத்தியாளர் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன், ஆசிம் ஃபேப்ரிக்ஸ் பிரைவேட் லிமிடெட் அசோக் ராம்குமார், ஜவுளி ஏற்றுமதியாளர் சங்க செயலாளர் குமார், ஜவுளி ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்கள், வட்டாட்சியர் ராதிகா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து, பல்வேறு தரப்பினரின் உதவிகள் மூலம் தூத்துக்குடி, திருநெல்வேலி மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், கரூர் மாவட்டத்தில் இருந்து அனுப்பும் பணி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முடித்து விடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தூத்துக்குடிக்கு மேலும் 2 வாகனங்களில் நிவாரணப் பொருட்கள் - சென்னை மாநகராட்சி அனுப்பிவைப்பு!