கரூர்: தாந்தோன்றிமலை பாரதிதாசன் நகரைச் சேர்ந்த சக்திவேல் தனது மனைவி செந்தில் ராணி பெயரில் அதே பகுதியில் நான்கு வீட்டுமனைகளை வாங்கியுள்ளார். அவரது வீட்டுமனையை வரைமுறை செய்வதற்கு க. பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
ஆனால் இதற்கு அனுமதி வழங்க வட்டார வளர்ச்சி அலுவலர் குமரவேல் 25 ஆயிரம் ரூபாய் கையூட்டு கேட்டதாகக் கூறப்படுகிறது. உடனே இது குறித்து கரூர் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினரிடம் சக்திவேல் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று (நவம்பர் 23) ரசாயனம் தடவிய 25 ஆயிரம் ரூபாய் பணத்தை சக்திவேலிடம் வழங்கி குமரவேலிடம் கொடுக்குமாறு தெரிவித்தனர்.
பின்னர் சக்திவேல் ரசாயனம் தடவிய பணத்தை குமரவேலிடம் கொடுத்ததை லஞ்ச ஒழிப்பு காவலர்கள் மறைந்திருந்து கையும் களவுமாகப் பிடித்து ஐந்து மணி நேரம் சோதனைக்குப் பிறகு அவரைக் கைதுசெய்தனர்.
தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலரின் வீட்டில் இரவு முழுவதும் சோதனை நடத்தினர். கரூரில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் வட்டார வளர்ச்சி அலுவலர் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மோட்டார் வாகன ஆய்வாளர் மீது வேனை ஏற்றிக்கொலை: வேன் ஓட்டுநரை தேடும் போலீஸ்