கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கோயில்கள் திறக்கப்பட்டுள்ளன. தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்தும், கிருமி நாசினி பயன்படுத்தியும் கோயில்களில் வழிபாடு செய்யும் வகையில் நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, மக்கள் முகக்கவசங்கள் அணிந்து கிருமி நாசினி பயன்படுத்தி தகுந்த இடைவெளியுடன் வழிபாடு நடத்தி வருகின்றனர். இது ஒருபுறம் இருந்தாலும் கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர், மந்திரம் ஓதுவோர் போன்றோரின் நிலைமை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தட்டில் விழும் காசுகளை வாழ்வாதாரமாகக் கொண்டிருந்த பலரும் கடந்த ஆறு மாதங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இது குறித்து கரூர் பகுதியில் உள்ள புகழ்பெற்ற தனியார் கோயிலான வேம்பு மாரியம்மன் கோயிலில் அர்ச்சகராகப் பணியாற்றும் நாகராஜன் என்பவர் பேசுகையில், ”பரவிவரும் கரோனா தொற்று காரணமாக நித்திய கால பூஜை கடுமையான சிரமங்களுக்கு நடுவில் நடைபெற்றது. குறிப்பாக ஆடி வெள்ளிக்கிழமை, கோயில்களில் சிறப்பாக நடைபெறும் வளைகாப்பு போன்ற சுப நிகழ்ச்சிகள் அனைத்தும் தடைபட்டது. இருப்பினும் நித்திய கால பூஜைக்குத் தேவையான நிதிகளை தினந்தோறும் வரும் பக்தர்கள் கோயில் வாசலில் வைத்துவிட்டு சென்று விடுவார்கள். அதை எடுத்து பூஜைக்கு பொருள்கள் வாங்கப் பயன்படுத்துவோம்.
இது தனியார் கோயில் என்பதால் தட்டில் விழும் காசுகளை நம்பியே எங்கள் வாழ்க்கையைக் கழித்து வந்தோம். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் கரோனா தொற்று, வாழ்க்கையை வேறு புறம் புரட்டிப்போட்டுள்ளது. கையிலிருந்த நிதிகளைப் பயன்படுத்தி பூஜையையும் குடும்பத்தையும் சமாளித்தோம். தனியார் கோயில் என்பதால் அரசும், எந்தவித அறக்கட்டளைகளும் எங்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை” என்றார் வேதனையுடன்.
இதேபோல், கரூர் மாவட்டம், கொங்கு மண்டலத்தில் உள்ள, இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான, ஏழு சிவ ஸ்தலங்களில் முக்கிய ஸ்தலமாக இருக்கும் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பணிபுரியும் அர்ச்சகர் தண்டபாணி கூறியதாவது;
”ஆறு மாத காலம் கரோனா தொற்று காரணமாக கோயில்கள் நடைசாத்தப்பட்டு இருந்தாலும், ஆறு கால பூஜையும் சிறப்பாக நடைபெற்றது. தளர்வுகள் அளித்து வழிபாடு நடைபெறத் தொடங்கியது முதல் மக்களின் வருகை சற்று குறைவாகவே உள்ளது.
மேலும் இக்கோயிலில் கடந்த ஆறு மாதங்களாக ஊரடங்கு இருந்ததால் எந்த வருவாயும் கிடைக்கவில்லை. கோயிலில் அர்ச்சகராக இருப்பவர்கள் தட்டில் விழும் காசை நம்பியே வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்து அறநிலைத்துறை குருக்கள், பணியாளர்களைத் தவிர மற்ற யாருக்கும் சம்பளம் வரவில்லை” எனத் தெரிவித்தார். இது சோழர் ஆட்சியில் கட்டப்பட்ட கோயில் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டிஜிட்டலில் மீண்டும் ரிலீஸ் ஆகும் 'பசும்பொன் தேவர் வரலாறு'