கரூர்: விநாயகர் பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை வைத்து வழிபட இல்லத்தரசிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒவ்வொரு ஊரிலும் மக்களை கவர வித்தியாசமாக விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவரவர் வசதிக்கு ஏற்ப விநாயகர் சதுர்த்தி விழாவில் பழங்கள், இனிப்பு வகைகள் வைத்து பூஜை செய்து வழிபடுவர்.
அப்படி இனிப்பு வகைகள் வைத்து விநாயகரை வழிபடுபவர்களை கவர்வதற்காக பலகார கடைகளில் இனிப்பு வகைகள் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் பிரபல தனியார் பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது.
அந்த பேக்கரியில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக, கணேசா லட்டு என்று பெயர் வைக்கப்பட்ட பெரிய வகை லட்டு பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த லட்டில், அத்திப்பழம், முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட உலர் பழங்கள் மூலம் அலங்கரிக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து கடை ஊழியர் கூறுகையில், "விநாயகர் சதுர்த்திக்கு பூஜையில் வைத்து வழிபட கொழுக்கட்டையுடன் நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள பெரிய கணேசா லட்டு வைத்து வழிபடலாம்" என்று கூறினார். பொதுமக்களும் ஆர்வத்துடன் இந்த பேக்கரி கடையில் இனிப்பு பலகார வகைகளை வாங்கிச் செல்கின்றனர். இது தவிர கரூரில் உள்ள காமராஜர் மார்க்கெட்டில் விநாயகர் சதுர்த்திக்கு பூஜை பொருட்கள் வாங்க நேற்று இரவு முதலே கூட்டம் அலைமோதியது. குறிப்பாக களி மண்ணால் ஆன குட்டி விநாயகர் சிலைகள் விற்பனை களைகட்டியது.
இதையும் படிங்க: வடமாநில தொழிலாளர்களின் விநாயகர் சிலை குடோனுக்கு சீல்... கொதித்தெழுந்த அண்ணாமலை.. மாவட்ட நிர்வாகம் கூறுவது என்ன?