கரூர் மாவட்டம் மாயனூர் அருகே உள்ள வீரராக்கியம் பகுதியில் தனியார் கூட்டரங்கில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான வன்முறையற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி மோகன்ராம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட குழந்தைகள் நல குழு தலைவர், மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், வழக்கறிஞர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதிகள், பாதுகாப்பு அமைப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் கரூர் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அம்சவள்ளி கூறுகையில், "பாலியல் குற்றங்கள் பெண்களுக்கு எதிராக மட்டுமல்ல சிறுவர்களுக்கு எதிராகவும் நடைபெறுகிறது. குறிப்பாக ஓரினச் சேர்க்கையில் சிறுவர்களை ஈடுபடுத்தி பாலியல் குற்றங்களுக்கு தள்ளப்படுகின்றனர்.
இம்மாதிரியான குற்றவாளிகளை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். உங்கள் பகுதியில் இது தொடர்பான பிரச்னைகள் எதுவும் எழுந்தால் காவல்துறையிடம் முறையாக தெரிவிக்க வேண்டும்" என்றார்.
மேலும் ஆலோசனை கூட்டத்தில் உள்ளாட்சி அளவில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களுடன் சேர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது எனவும் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி ஏற்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.