கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் ஓமன் நாட்டில் தங்கி பணியாற்றி வருகிறார். இவர், முகநூல் விளம்பரத்தை பார்த்து அதன் மூலம் ஐ-போனை குறைந்த விலைக்கு ஆர்டர் செய்துள்ளார். சிறிது நேரத்திற்குப் பிறகு பொறியாளரின் வாட்ஸ்அப் மூலம் ஓமன் நாட்டின் கஸ்டம்ஸ் மற்றும் காவல் துறையிடம் இருந்து ஒரு நோட்டீஸ் வந்துள்ளது. அதில், தாங்கள் ஓமன் நாட்டில் இருந்து குறைந்த விலையில் செல்போன்களை வாங்கி, இந்தியாவுக்கு கடத்த முயற்சிப்பதாகவும் அதற்கான அபராத தொகையையும் செலுத்துமாறு இருந்துள்ளது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொறியாளர், பின்னர் அபராதத்தொகையாக 7லட்சத்து ஆயிரத்து 900 ரூபாய் பணத்தை அவர்கள் குறிப்பிட்ட வங்கிக்கணக்கில் செலுத்தியுள்ளார். மேலும், வங்கிக் கணக்கில் பணம் செலுத்திவிட்டால்கூட வழக்குத் தொடரப்படும் என காவல் துறை தரப்பில் இருந்து மிரட்டல் வந்துள்ளது. இதனால், சந்தேகமடைந்த பொறியாளர் உடனடியாக இதுகுறித்து அவரது தந்தைக்குத் தகவல் தெரிவித்தார். தொடர்ந்து இது குறித்து கரூர் மாவட்ட இணைய குற்றப்பிரிவில் புகார் அளிக்க கூறினார்.
அதன் பேரில் அவரது தந்தை கரூர் மாவட்ட இணைய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். தொடர்ந்து இது குறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், ஓமன் நாட்டின் கஸ்டம்ஸ் அதிகாரிகள் போல வடமாநில கும்பல் ஒன்று ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. மேலும் வங்கி கணக்குகள், தொலைபேசி எண்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தபோது திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த பாதேல் டெபர்மா, ஜெதிராய் மோல் சோல், இஷாபகதூர் மால்சம் மற்றும் சுராஜித் டெபர்மா ஆகியோர் இணையவழி பண மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக கரூர் மாவட்ட இணைய குற்றப்பிரிவு ஆய்வாளர் அம்சவேணி தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் பெங்களூரில் பதுங்கியிருந்த, இணையதள மோசடி கும்பல் தலைவன் பாதேல் டெபர்மா (30), ஜெதிராய் மோல் சோல் (21) ஆகிய இருவரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து தமிழ்நாடு அழைத்துவரப்பட்டனர். பின்னர் அவர்கள் நேற்று (ஏப்.28) கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் இக்கும்பல் பலரிடம் கஸ்டம்ஸ் அதிகாரிகள் எனக் கூறி மோசடியில் ஈடுபட்டு வந்ததை காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர். இணையதளங்கள் மூலம் ஏற்படும் குற்றங்களில் இருந்து பொதுமக்கள் காத்துக்கொள்ள விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். மேலும், இணையவழி மோசடி தொடர்பாக இலவச தொலைபேசி எண்: 1930 புகார் தெரிவிக்கலாம் என காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் துப்பாக்கிச்சூடு பயிற்சி... வீட்டிற்குள் பாய்ந்த துப்பாக்கிக்குண்டு...