கரூர் நகர்ப் பகுதியில் இயங்கி வரும் தனியார் எலும்பு முறிவு மருத்துவமனை மருத்துவர், அம்மருத்துவமனையில் பணியாற்றும் பெண்ணின் 16 வயது மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கடந்த 13ஆம் தேதி கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதனடிப்படையில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மருத்துவமனை மேலாளரை நேற்று முன்தினம் (நவ.15) கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக இருந்த மற்றொரு மருத்துவரைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு வலைவீசித் தேடி வந்தனர்.
இந்நிலையில் கோயம்புத்தூரில் மருத்துவர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கரூர் டிஎஸ்பி தேவராஜ் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் கோயம்புத்தூர் விரைந்தனர். ஆனால், அங்கிருந்து சேலத்திற்கு மருத்துவர் தப்பிச் சென்றார்.
நடு இரவில் நடுரோட்டில் வைத்து மருத்துவர் கைது
பின்னர், சேலத்தில் மருத்துவரின் செல்போன் சிக்னல் கண்டறியப்பட்டநிலையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கீதாஞ்சலி தலைமையிலான மற்றொரு தனிப்படை, செல்போன் சிக்னலைப் பின்தொடர்ந்தது. சேலத்தில் இருந்து கரூர் வேலாயுதம்பாளையம் பைபாஸ் சாலையில் சென்றுகொண்டிருந்த மருத்துவரின் காரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
பின்னர் நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்தி, அவரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவையடுத்து, மருத்துவர் கரூர் கிளைச்சிறையில அடைக்கப்பட்டார்.
கரூரில் பரபரப்பை ஏற்படுத்திய போக்சோ வழக்கில், நள்ளிரவில் மருத்துவர் கைது செய்யப்பட்ட விவகாரம், சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: தனியார் பள்ளி தாளாளர் மீது புகார்