கரூர்: காதல் விவகாரத்தில் ஹரிஹரன் என்னும் இளைஞர் வெட்டிக் கொலைசெய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, அவரது காதலியின் தந்தையை காவல் துறையினர் இன்று (ஜன. 07) கைதுசெய்தனர்.
கரூர் காமராஜபுரம் சாலையைச் சேர்ந்த ஜெயராம் என்பவரின் மகன் ஹரிஹரன் (22) சலூன் கடை நடத்திவருகிறார். இவர் அதே பகுதியிலுள்ள வேலன் - தேவி தம்பதியின் மகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்துவந்துள்ளார்.
இந்த நிலையில் ஹரிஹரன் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், பெண்ணின் பெற்றோர் திருமணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இருவருக்கும் இடையே பிரச்சினை நிலவியதாகத் தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று ஹரிஹரனுக்கு செல்போன் மூலம் தொடர்புகொண்டு கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் அருகே வர அழைக்குமாறு, பெற்றோர் அவர்களது மகளிடம் தெரிவித்துள்ளனர். அப்பெண்ணின் அழைப்பை ஏற்று ஹரிஹரன் கோயில் பகுதிக்கு அருகே வரவே, அவருக்கும், அப்பெண்ணின் குடும்பத்தாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பெண்ணின் பெரியப்பா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் ஹரிஹரனைக் கடுமையாகத் தாக்கி, அவரது முதுகில் கத்தியால் குத்தியுள்ளனர். மேலும் அவரை சுமார் 500 மீட்டர் தொலைவுக்குத் தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அந்நபர் கரூர் காந்திபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக, மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அம்மாவட்ட காவல் துறையினர், பெண்ணின் பெரியப்பா சங்கர் (50), தாய்மாமன்கள் கார்த்திகேயன் (40), வெள்ளைச்சாமி (38) ஆகிய மூவரை நேற்று கைதுசெய்தனர். இதனையடுத்து இன்று காலை பெண்ணின் தந்தை வேலனையும் கைதுசெய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள பெண்ணின் சித்தப்பா முத்துவைத் தேடிவருகின்றனர்.
இந்நிலையில் இளைஞரின் உடலை வாங்க மறுத்து கரூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி முன்பாக, ஹரிஹரனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது இந்தக் கொலையில் ஹரிஹரனை காதலித்த பெண்ணுக்கும் தொடர்புள்ளதால், குற்றவாளிகளின் பட்டியலில் அவரையும் இணைக்க வேண்டும் எனக்கூறி ஹரிஹரனின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சற்று பதற்றம் ஏற்பட்டது.
இதையும் படிங்க: கார் மீது லாரி மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு