கரூர் மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சிவகாமசுந்தரியை ஆதரித்து வெள்ளியணை மற்றும் தரகம்பட்டி பகுதிகளில் திமுகவின் மாநில மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு மக்களுக்கு எதிரான விவசாயச் சட்டங்கள், நீட் தேர்வு, குடியுரிமை திருத்தச் சட்டங்கள் அனைத்தையும் மத்திய பாஜக அரசு கொண்டு வந்தது. அதனைக் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்த அதிமுக அரசு, தமிழ்நாட்டு மக்களை டெல்லியில் அடகு வைத்தது. தமிழ்நாட்டில் உள்ள மக்கள் பத்து ஆண்டுகளாக நடைபெற்ற அதிமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளார்கள்.
திமுக ஆட்சியில் அமர்ந்தவுடன், அரசுப் பணிகளில் காலியாக உள்ள மூன்று லட்சத்து 50 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அந்தப் பணியிடங்களில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும். திமுக தலைவர் கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவார்.
தற்பொழுது ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மாதத்தில் பெரும்பாலான வருவாய் தண்ணீருக்கே செலவிட்டு வருகிறார்கள். தினந்தோறும் கேஸ் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளுக்கு இல்லத்தரசிகள் சென்றால், இன்று ஒரு பொருள் நாளை ஒரு பொருள் என மாதம்தோறும் அலைய வேண்டிய நிலை உள்ளது. கைரேகைப் பதிவு கருவிகளும் முறையாக இயங்காததால் ரேஷன் பொருட்களை வாங்க முடியாத சூழ்நிலை தொடர்ந்து வருகிறது.
தினந்தோறும் ஒரு வண்ணத்தில் மாறி கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி நம்மைப் பார்த்து பச்சோந்தி என்று விமர்சனம் செய்கிறார். நான் ஊர்ந்து போய் பதவி ஏற்றுக் கொள்ள பாம்பா, பல்லியா என்று பேசுகிறார். இதில் ஏதாவது ஒன்றைத்தேர்வு செய்து கொள்ள நமக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். இல்லத்தரசிகளை பாராட்டக்கூட யாரும் முன் வருவதில்லை. அவர்களுக்கு உரிமைத்தொகையாக மாதம் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ரேஷன் அட்டை வைத்துள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் இந்தத் தொகை வழங்கப்படும்" என்றார்.
தொடர்ந்து குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் மாணிக்கத்தை ஆதரித்து கொசூர், தோகைமலை பேருந்து நிலையம் ஆகியப் பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் நின்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, "விவசாயிகளைப் பாதிக்காத வகையில் பால் விலை மூன்று ரூபாய் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கேஸ், சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும். குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் மக்களின் பிரதான கோரிக்கைகளாக உள்ள குளித்தலை புதிய பேருந்து நிலையம், தோகை மலைப்பகுதிக்கு தனி காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றித் தரப்படும்.
மறைந்த திமுக தலைவர் எனது தந்தை கருணாநிதி குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் முதன்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு அவர் எந்தத் தேர்தலிலும் தோல்வியுற்றது இல்லை" எனப் பெருமிதம் தெரிவித்தார்.