சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு திருமண உதவித் தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி கரூர் நகராட்சி திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மின்சார, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வழங்கினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "திமுக அரசு மகளிர் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை பொருளாதார மேம்பாடு அடைய மகளிர் சுய உதவிக் குழு உள்ளாட்சி துறையில் 33 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி செயல்படுத்தினார்.
அவர் வழியில் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.
![திட்டப் பயணாளர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-krr-minister-senthilbalaji-speach-news-pic-scr-tn10050_05082021203403_0508f_1628175843_774.jpg)
தேர்தல் வாக்குறுதியாக திமுக அரசு அமைந்தவுடன் கரோனா நிவாரண தொகையாக ஜூன் 3ம் தேதி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4,000 வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது.
இந்நிலையில், பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்டு திமுக அரசு பதவியேற்றவுடன் மே மாதம் தொடக்கத்தில் முதல்கட்டமாக ரூ.2,000 இரண்டாம் தவணையாக ஜூன் 3 தேதி ரூ.2,000 இரண்டாயிரம் என மொத்தம் ரூ.4,000 நிவாரண தொகையாக திமுக அரசு வழங்கியது.
வாக்குறுதியை நிறைவேற்றிய திமுக அரசு தேர்தல் நேரத்தில் அளிக்காத வாக்குறுதி திட்டமான 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தையும் அறிவித்தது மக்களுக்கு வழங்கியது.
கரோனா பெருந்தொற்று அதிகரித்த நேரத்தில் தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் மனுக்கள் மீதான தீர்வு எட்டப்படும் என வாக்குறுதி அளித்திருந்த நிலையில் தற்போது 80 சதவீத மனுக்கள் மீதான தீர்ப்பு எட்டப்பட்டுள்ளது.
மேலும், இன்று தமிழ்நாடு முழுவதும் மக்களை தேடி மருத்துவம் என்ற சிறந்த திட்டத்தை தமிழக முதலமைச்சர் துவங்கி வைத்துள்ளார். திமுக அரசுக்கு மக்கள் நீங்கள் அரணாக இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மொத்தம் 159 பயனாளிகளுக்கு ரூ.35,576 மதிப்பிலான 8 கிராம் தங்க நாணயம், பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு தலா ரூ.50,000 பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு படித்த பெண்களுக்கு தலா ரூ 25000 வீதம் மொத்தம் என 251 பயனாளிகளுக்கு சுமார் ஒரு கோடியே 91 லட்சத்து 79 ஆயிரத்து 576 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இதையும் படிங்க: பொறியியல் படிப்பில் சேர 1,17,562 மாணவர்கள் பதிவு