பெரம்பலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் பாரிவேந்தர் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனை சந்தித்தபின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "தொகுதி மேம்பாட்டிற்காக மத்திய அரசு ஆண்டுதோறும் வழங்கும் 5 கோடி ரூபாய் நிதியில் பெரம்பலூர் தொகுதிக்குள்பட்ட பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளிகளுக்கு கணினி, தண்ணீர் வசதி உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படும்" என்று உறுதியளித்தார்.
விவசாயிகள் தங்களது விளைபொருட்களை பல்வேறு பகுதிகளுக்கு கொண்டுசெல்வதற்குத் தேவையான ரயில் பாதைகள் அமைக்கவும் மத்திய அமைச்சரிடம் கோரிக்கைவைத்துள்ளதாக குறிப்பிட்ட பாரிவேந்தர், அமைச்சர்கள் இது குறித்து எங்களுக்கு உரிய பதில் அளித்துள்ளதாகத் தெரிவித்தார். விரைவில் இந்தத் திட்டம் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், குளித்தலையில் காணப்படும் பல்வேறு பிரச்னைகள் குறித்து பொதுமக்கள் அளித்த கோரிக்கைகளை கரூர் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துவிவாதித்தோம் என்றார்.