கூவிக்கூவி பொருட்களை விற்ற காலம் போய், இன்று இருந்த இடத்திலிருந்து இணையத்தின் மூலமாக வாங்கும் காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம்.
கரூர், திருச்சி, மதுரை, கோவை போன்ற மாநகரங்களில் இணையத்தின் மூலமாக ஏற்படும் விற்பனை, பரிவர்த்தனை அதிகமாகக் காணப்படுகிறது. அந்த வகையில் கரூரில் முதன்முதலாக இணையத்தின் மூலம் காய்கறிகளை விற்பனை செய்து இளைஞர் ஒருவர் சாதித்துள்ளார்.
கரூரைச் சேர்ந்த மகேஸ்வரனுக்கு(21) தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டில் படிக்கும்போதே கேம்பஸ் இன்டர்வியூ தேர்வில், தேர்வாகி சென்னையில் உள்ள தனியார் ஐடி கம்பெனியில் நல்ல ஊதியத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது.
அந்த வேலையை சில மாதங்கள் மட்டுமே புரிந்த அவர், தனது பரம்பரைத் தொழிலான காய்கறிக் கடையை கவனிக்கத் திட்டமிட்டுள்ளார். பரம்பரைத் தொழில் மீது கொண்ட ஆர்வத்தால், 21 வயதான இவர் தனது அப்பாவுடன் இணைந்து காய்கறிக் கடை வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்தார்.
அதன் முடிவாக சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் காய்கறிகளை இணையம் மூலமாக விற்பனை செய்து நல்ல லாபம் ஈட்டும் உத்தியை கரூரில் கொண்டு வர முயற்சி செய்தார்.
இந்த யோசனையில் உணவு வகைகளை இணையத்தின் மூலமாக விற்பனை செய்து வரும் நிறுவனத்தில் தங்களது கடையையும் இணைத்துக்கொண்டு, காய்கறிகளை இணையத்தில் விற்பனை செய்து நல்ல லாபம் ஈட்டியிருக்கிறார்.
மேலும் இதுகுறித்து பேசிய மகேஸ்வரன் ஆரம்பத்தில் பெரிய வரவேற்பு இல்லாத நிலையில் தற்போது மூன்று மாதங்கள் கடந்த பின்பு நிறைய ஆர்டர்கள் வருவதாகவும், இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லலாம் என்று நம்பிக்கை வந்து உள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேபோல் 'தன்னை அனைவரும் தனியார் துறையில் நல்ல வேலை கிடைத்தும் அதனை பயன்படுத்திக் கொள்ளாமல் இத்தொழிலை ஏன் செய்கிறாய் என்று இழிவு செய்தனர். ஆனால் அதனைப் பொருட்படுத்தாமல் காய்கறி விற்பதில் கவனம் செலுத்தி, அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். இது எனக்கு கிடைத்த முதல் வெற்றி' என நம்பிக்கையுடன் கூறினார்.
குறிப்பாக, ஆன்லைனில் பயன்படுத்தப்படும் அப்ளிகேஷனில் தினமும் ஏழு மணி நிலவரப்படி காய்கறிகள் விலையை மாற்றி பொதுமக்களுக்கு ஏதுவாக மொத்த விலையில் குறைவாக விற்று வருகிறேன் என்றும்; அதிநவீன காய்கறி சந்தையில் கிடைக்கும் அனைத்துப் பொருட்களையும் ஆன்லைன் மூலம் விற்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கண்களில் நம்பிக்கை மினுங்க சொல்கிறார்.
கடின உழைப்புக்கு நிகர் வேறு இல்லை என்பதற்கு ஒரு உதாரணமாக இருக்கிறார் மகேஸ்வரன். வாழ்த்துகள்.
இதையும் படிங்க: கடலூரில் பெட்ரோ கெமிக்கல் ஆலை - முதலமைச்சர் ஆலோசனை!