கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், “சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சமூக இடைவெளி அவசியம் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியது. இதே நடவடிக்கையை வைரஸால் பேரழிவைச் சந்தித்த சீனா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட நாடுகள் கடைப்பிடித்து வருகின்றன.
இதன் அடிப்படையிலேயே, கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. எனவே, அனைத்து குடிமக்களும் சமூக கடமையாக இந்த 21 நாள் ஊரடங்கு உத்தரவை பொறுப்புடன் கடைபிடிக்க வேண்டும். ஒட்டுமொத்த சமூகமும் ஒழுக்கத்துடன் விதிமுறையை கடைபிடித்தால் கரோனா பாதிப்பை தடுக்க முடியும்.
இந்த ஊரடங்கு உத்தரவால், உணவுப் பொருட்கள் பற்றாக்குறை ஏற்படும் என அச்சப்பட தேவையில்லை. மக்களின் தேவைகள் அனைத்தையும் அரசு பூர்த்தி செய்யும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அடிப்படை தேவையான மளிகைப்பொருட்கள், பால், மருந்து போன்றவற்றை நாள்தோறும் வழங்க அரசு திட்டங்களை வைத்திருக்கிறது. இதற்காக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பணியாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றது.
கரூர் மாவட்டத்தில் மருந்து பற்றாக்குறை உள்ளது என்பது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து அதனை கொண்டு வந்து பூர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க தொடங்கிவிட்டது. மேலும், சேலத்தில் இருந்து மளிகை பொருட்கள் வரவழைக்கப்பட்டு மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.
இதுவரை வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வந்து கரூரில் தங்கி இருக்கக்கூடிய 381 பேரும் தடுத்து வைக்கப்பட்டு கண்காணிப்பு வளையத்திலேயே வைக்கப்பட்டுள்ளனர். இதில் 294 பேர் வெளி மாநிலத்தில் இருந்தும் 87 பேர் வெளிநாட்டில் இருந்தும் கரூர் மாவட்டத்தில் வந்திருக்கின்றனர். மேலும், அறிகுறிகள் தென்பட்ட 15 பேர் தீவிர சிகிச்சை தனி பிரிவில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் வீட்டிலும் எச்சரிக்கையாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள 18 எல்லைப் பகுதிகள் மூடப்பட்டுள்ளன். கரூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பு துளியும் இல்லை” என தெரிவித்தார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மின்சாரம், தொழில்நுட்பம், மருத்துவம், உள்ளாட்சி உள்ளிட்ட துறைசார்ந்த பிரதிநிதிகள் பங்குகொண்டனர்.
இதையும் படிங்க : 'வாகன ஓட்டிகள் தேவையின்றி வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும்' - சென்னை ஆணையர்