மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் எஜுகேஷன் டெக்னாலஜி (NCERT) எனும் நிறுவனத்தின் சார்பில், நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்றலை ஊக்கப்படுத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு, தகவல் தொழில்நுட்ப நல்லாசிரியர் எனும் விருது வழங்கப்படுகிறது.
அந்தவகையில் 2018, 2019ஆம் ஆண்டுகளுக்கான, தகவல் தொழில்நுட்பத்துக்கான சிறந்த ஆசிரியர் விருது தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கரூர் மாவட்டம் வெள்ளியணை அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மனோகர் சுப்பிரமணி(44), 2018ஆம் ஆண்டுக்கான தொழில்நுட்ப ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
QR கோடு செயலி உருவாக்கம்
இவர் கடந்த 5 ஆண்டுகளாக QR கோடை உருவாக்கி, வீட்டுப்பாடங்களை முடிக்கும் புதிய முறையை உருவாக்கியுள்ளார். மேலும் அரசுப் பள்ளியில் பயிலும் ஒவ்வொரு மாணவருக்கும் அடையாள அட்டையையும் வழங்கியுள்ளார்.
இதன் மூலம் ஒவ்வொரு மாணவரின் செயல்பாடுகளையும் பெற்றோரும், ஆசிரியர்களும் அறிந்துகொள்ள வழிவகை செய்துள்ளார்.
இதனையடுத்து, கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், கல்வி துறை அலுவலர்கள், சக ஆசிரியர்கள் என அனைவரும், ஆசிரியர் மனோகர் சுப்பிரமணிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
வீட்டுப்பாடங்களை தெரிந்து கொள்ள வழிவகை
இது குறித்து பள்ளியின் தலைமையாசிரியர் தர்மலிங்கம் பேசுகையில், ”எங்கள் பள்ளியில் பணியாற்றும் அறிவியல் பிரிவு ஆசிரியர், மாணவர்களுக்கு அறிவியல் தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகள், மரம் வளர்ப்பு ஆகியவற்றை ஊக்கப்படுத்தி சிறப்பாக செயல்பட்டார்.
கடந்த 2016ஆம் ஆண்டு முதல் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதற்காக, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் QR கோடு முறையை அறிமுகப்படுத்தினார்.
இதன் விளைவாக மாணவர்களின் வீட்டுப் பாடங்களை பெற்றோரும், பள்ளி ஆசிரியர்களும் தெரிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டது.
தனியார் பள்ளி மாணவர்களை கவர்ந்திழுக்கும் அரசுப்பள்ளி
தற்போது எங்கள் பள்ளியில் நடப்பாண்டில், கடந்த இரண்டு நாட்களில் சுமார் 40 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். அவர்களில் 15 பேர் தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் ஆவர். தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை கவர்ந்திழுக்கும் அரசு பள்ளியாக, எங்கள் பள்ளி திகழ்கிறது. எங்கள் சக ஆசிரியருக்கு கிடைத்த, இந்த விருது எங்கள் பள்ளி செயல்பாடுகளுக்கு கிடைத்த ஒரு அங்கீகாரம்” என்றார்.
மாணவர்களிடம் வளர்க்கப்பட்ட சுய கற்றல் மேம்பாடு
விருது பெற்றது குறித்து ஆசிரியர் மனோகர் சுப்பிரமணி பேசுகையில், “தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் விருது வழங்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒரு கனவு உண்டு, எனக்கும் அந்த கனவு இருந்தது.
அதற்காக சிரமம் பார்க்காமல் முழு கவனத்துடன் மாணவர்களுக்கு அறிவியல் செயல்பாடுகளை ஊக்குவித்தேன். அறிவியல் விழிப்புணர்வு செயல்பாடுகள் மூலம் மாணவர்களுக்கு சுய கற்றல் மேம்பாடு வளர்க்கப்பட்டுள்ளது.
இதற்காக கலாசார கழகம் என ஒரு தனிப்பிரிவு பள்ளிகள் செயல்படுகின்றன. இதற்கு தேசிய அளவில் விருது கிடைத்துள்ளது. அதேபோல அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக தேசிய அளவிலான சில்வர் விருதினையும் எங்கள் பள்ளி பெற்றுள்ளது.
தற்போது வழங்கப்பட்டுள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் விருது எனக்கும், எங்கள் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது” என்றார்.
"ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை” எனும் குறளுக்கு ஏற்ப, மாணவர்களின் நலன் கருதி, தளர்வில்லாமல் ஊக்கத்துடன் உழைத்த ஆசிரியர் மனோகர் சுப்பிரமணிக்கு வழங்கப்பட்டுள்ள விருது, ஆசிரியர் சமூகத்தை இன்னும் ஊக்கப்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.
இதையும் படிங்க: எழுத்துகளால் கருணாநிதி படத்தை வரைந்த கல்லூரி மாணவர் - குவியும் அப்லாஸ்