கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த பேரூர் உடையாபட்டி குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திடீரென அரை நிர்வாணத்தோடு வந்து, காவல் துறையினரைக் கண்டித்து முழக்கமிட்டனர். தொடர்ந்து, கண்களில் கருப்புத்துணி கட்டியபடி, முழக்கமிடவே அங்கு பரபரப்பு நிலவியது.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேராவிடம், நரி குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த ராதா என்பவர் மனு அளித்தார். அதில்,'நாங்கள் குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். என் கணவர் சுப்பிரமணியன், கடந்த 19ஆம் தேதி உடையார்பட்டியில் காரில் செல்லும்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகத்தின் மீது எதிர்பாராதவிதமாக மோதிவிட்டார்.
இதற்கு அவர் மன்னிப்பு கேட்டதுடன், வாகன பாதிப்பை சரி செய்து தருகிறேன் எனக் கூறியுள்ளார். ஆனால், அப்போது அப்பகுதியைச் சேர்ந்த ஏழெட்டு பேர் அவரை சாதிப் பெயரைச் சொல்லி மோசமாகத் திட்டி, கல், கம்பி, கட்டை, காலணியால் தாக்கி, உடைகளை களைந்து அவமானப்படுத்தியுள்ளனர்.
காயமடைந்த அவர் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து தோகைமலை காவல் துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவிலலை. மேலும் புகார் அளித்தது குறித்து தாக்குதல் நடத்தியவர்கள் எங்களை மிரட்டி வருகின்றனர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்'என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.