கரூர் நகராட்சிகுட்பட்ட பகுதியில் கடந்த 110 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பழமையான பள்ளிக் கட்டடம் உள்ளது. தற்போதைய நிலையில் இந்தப் பள்ளிக் கட்டடத்தில் பயின்ற பலரும் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் எனப் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி, இப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில், கரூர் வைஸ்யா வங்கியும், கரூர் டெக்ஸ் சிட்டி ரோட்டரி சங்கமும் இணைந்து ரூ.2 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில், பழமையான பள்ளிக் கட்டடத்தை இடித்துவிட்டு, அதே இடத்தில் புதிய கட்டடத்தை கட்டுவதற்கான பூமி பூஜை போடப்பட்டு உள்ளது.
இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் சார்பில், மேற்கு மாவட்டச் செயலாளரும், வழக்கறிஞருமான நன்மாறன் தலைமையில் பள்ளி வளாகம் முன்பு கூடிய கட்சினர், பாரம்பரிய கட்டடத்தை இடிக்காதே என்ற வாசகங்களைப் பதிவு செய்த பதாகைகளை கையில் ஏந்தி, பள்ளி கட்டடத்தை இடிக்கக் கூடாது என வலியுறுத்தி கரூர் நகராட்சி ஆணையரைச் சந்தித்து மனு அளித்தனர்.