சமூக ஆர்வலர் முகிலனுடன் போராட்டத்தில் கலந்துகொண்ட பெண் ஒருவர் கொடுத்த பாலியல் புகார் தொடர்பான வழக்கில், இன்று அதிகாலை கரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி விஜய் கார்த்திக் முன்னிலையில் காவல்துறையினர் முகிலனை ஆஜர்படுத்தினர். தொடர்ந்து முகிலனை 15 நாட்கள் காவலில் வைத்து, மீண்டும் ஜூலை 24ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். பின்னர் திருச்சி மத்திய சிறைக்கு முகிலன் கொண்டு செல்லப்பட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முகிலன் மனைவி பூங்கொடி, ‘முகிலன் மீதான பாலியல் குற்றச்சாட்டு முழுக்க முழுக்க தூண்டிவிடப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தொடர்புடைய முக்கிய சிடி குறித்து முகிலனிடம் கேள்வி கேட்டுள்ளனர். மக்களுக்காக போராடுவது ஒரு குற்றமா?’ என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், முகிலனை சந்தித்து பேசுவதற்கு தனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக நீதிபதி வீட்டில் ஆஜராக வந்த முகிலனை வீடியோ, புகைப்படம் எடுக்க வந்த பத்திரிகையாளர்களை 100 மீட்டர் முன்னதாக பேரிகேட் கொண்டு தடுத்து நிறுத்தியதால் காவல்துறையினருக்கும், செய்தியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.