கரூர்: ஈரோடு மாவட்டத்திலுள்ள சாயக்கழிவு நீர் ஆற்றில் கலப்பதற்கு தீர்வு காண வலியுறுத்தியும் மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிற்காக வாக்கு சேகரிக்க வருவோரிடம் உறுதிமொழி வாங்க உள்ளதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்கப் போராடி படுகொலை செய்யப்பட்ட கரூர் ஜெகநாதன் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கவும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
விவசாயி ஜெகநாதன் படுகொலை: கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 6ஆம் தேதி நடந்த குறைதீர் கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட விவசாயி ஜெகநாதனின் குடும்பத்திற்கு இழப்பீடு அளிக்கவும், குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் மனு அளித்தார். இதனைத்தொடர்ந்து நமது ஈடிவி பாரத்திடம் பேசிய அவர், 'கரூர் அருகே உள்ள குப்பம் காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஜெகநாதன் கடந்த ஏழு ஆண்டுகளாக சட்டவிரோத கல்குவாரிகளுக்கு எதிராக சட்டப்பூர்வமான நடவடிக்கை கோரி போராடி வந்தார். இதனால் பாதிக்கப்பட்ட சட்டவிரோத கல்குவாரி உரிமையாளர்கள் திட்டமிட்டு, விவசாயி ஜெகநாதன் வாகனத்தை ஏற்றி கடந்த 2022 அக்டோபர் 10ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்திற்கு க.பரமத்தி காவல்துறை அதிகாரிகள் துணையாக இருந்ததாக, பல்வேறு ஆதாரங்கள் கிடைத்ததால் விவசாயி ஜெகநாதன் படுகொலைக்கு சிறப்பு புலனாய்வு குழு (SIT) அரசு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். காவல்துறையோ கைது செய்த குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் போதுமான எதிர்ப்பை காவல்துறை தெரிவிக்காததால், குற்றவாளிகளுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
நெல்லை அடைமிதிப்பான்குளத்தில் அனுமதி இன்றி சட்டவிரோதமாக இயங்கிய கல்குவாரியில், நள்ளிரவில் ஏற்பட்ட வாகன விபத்தில் பலியான ஒரு குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளது. இதேபோல, கரூர் குப்பம் எம்.டி.சி கல்குவாரியில் நடைபெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு கரூர் மாவட்ட நிர்வாகம் ரூ.24 லட்சம் இழப்பீடு பெற்றுக் கொடுத்துள்ளது.
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: ஆனால், அரசு சொத்தை பாதுகாப்பதற்காக போராடிய காரணத்தினால் படுகொலை செய்யப்பட்ட ஜெகநாதனின் குடும்பத்திற்கு, இதுவரை அரசு தரப்பில் எவ்வித இழப்பீடும் வழங்கப்படவில்லை. ஜெகநாதனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. மண்ணையும் மக்களையும் இயற்கை வளத்தையும் காப்பதற்காக தொடர்ந்து செயல்பட்டுவந்த பாதிக்கப்பட்ட ஜெகநாதனின் குடும்பத்திற்கு, அரசு எவ்வித இழப்பீடும் தராதது எந்த விதத்திலும் நியாயம் இல்லை அறமும் இல்லை.
இழப்பீடு அளிக்காத அரசு: சட்டவிரோதமாக இயங்கிய கல்குவாரிகளில் சமூக சொத்தை திருடிய போது, அங்கு ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு அரசு நேரடியாக ரூ.25 லட்சம் இழப்பீடு தந்துள்ளது. ஆனால், சமூக அக்கறையோடு அரசு சொத்தை பாதுகாக்கப் போராடிய சமூக செயல்பாட்டாளர் விவசாயி ஜெகநாதனுக்கு, எவ்வித நீதியும் கிடைக்கவில்லை. அரசின் இந்த நடவடிக்கை வருத்தம் அளிக்கிறது கண்டனத்துக்குரியது.
வீடு புகுந்து மிரட்டும் கும்பல்: கடந்த மாதம் நாமக்கல்லில் நடைபெற்ற மேனகா கல்குவாரி கருத்துக்கு கேட்பு கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சமூக அலுவலர் சண்முகம் தாக்கப்பட்டார். கடந்த வாரம் உடன்குடியில் நடைபெற்ற கல்குவாரி கருத்துக்கு கூட்டத்தில், சமூக ஆர்வலர் குணசீலன் என்பவர் தாக்கப்பட்டார். பழனி பெரியம்மாபட்டியில் சட்டவிரோத கனிமக் கொள்கையை எதிர்த்து தொடர்ந்து அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்த வரும் முனைவர் காளிதாஸ் எனும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சட்டவிரோத கனிம கொள்ளை கும்பலால் அவரது வீடு புகுந்து மிரட்டப்பட்டுள்ளார். இயற்கை வளங்களை காப்பதற்கு தங்களது உயிரை பணயம் வைத்து இயற்கை ஆர்வலர்கள் போராடி வருகின்றனர்.
கரூர் அமைச்சர் நடவடிக்கை தேவை: எனவே, படுகொலை செய்யப்பட்ட ஜெகநாதன் குடும்பத்திற்கு தீர்வு காணக்கூடிய நிலையில் உள்ள கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், உள்ளூர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கவனத்திற்கு கொண்டு சென்று, தலைமைச் செயலாளர் மூலமாக உரிய இழப்பீட்டுத் தொகையும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு வேலையும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வாக்கு சேகரிப்போரிடம் கேள்வி கேட்டும் போராட்டம்: இல்லாவிடில், எதிர்வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு சட்டப்பேரவை கிழக்கு தேர்தலில் சமூக ஆர்வலர் ஜெகநாதன் படுகொலை சம்பவத்திற்கு நீதி கேட்கும் இயக்கத்தின் சார்பாகவும், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சமூக இயக்கங்களை ஒன்றுதிரட்டியும் அங்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சியினரை தெருவில் நிறுத்தி கேள்வி கேட்கும் போராட்டத்தை முன்னெடுக்க இருக்கிறோம்.
இது ஒன்றும் எங்களுக்கு புதிதல்ல, கரூர் மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுப்பு நிறுத்துவதற்காக கடந்த 2016 ஆம் ஆண்டு காவிரி ஆறு மணல் கொள்ளை தடுப்பு இயக்கத்தின் சார்பில் போராட்டங்களை முன்னெடுத்தோம். மேலும், சட்டப் போராட்டங்களை முன்னெடுத்து கரூர் மாவட்டத்தில் இதுவரை காவேரி மற்றும் அமராவதி ஆற்றில் மணல் எடுக்க கடந்த 6 ஆண்டுகளாக தடை பெற்று இயற்கை வளங்களை பாதுகாத்துள்ளோம்.
அமைச்சர்களை முற்றுகையிடுவோம்: எனவே, கரூரில் படுகொலை செய்யப்பட்ட விவசாயி ஜெகநாதன் குடும்பத்திற்கு இழப்பீடு பல வழங்க வேண்டியது அரசின் கடமை மக்கள் இயக்கங்களின் கடமை முன்னெடுத்து செல்ல வேண்டியது அரசும் மற்றும் அரசு அதிகாரிகளின் கடமை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். இல்லாவிடில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஜெகநாதன் படுகொலையை முன்னிறுத்தி தமிழ்நாடு அரசின் அமைச்சர்களை முற்றுகையிட்டு கேள்வி கேட்போம் என தெரிவித்தார்.
சாய கழிவுநீர்: இதேபோல, ஈரோடு பள்ளிபாளையம் வெண்டிபாளையம் பகுதியில் காவிரி ஆற்றில் தடுப்பணை அமைக்கப்பட்டு ஆண்டு முழுவதும் தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. ஆனால், சாய கழிவுநீர் கலந்ததால், குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு அரசு ரூ.500 கோடி திட்டத்தில் ஊராட்சி கோட்டை என்ற இடத்திலிருந்து ஈரோடு மாவட்ட நிர்வாகம் குடிநீர் வழங்கி வருகிறது. தடுப்பணை இருந்தும் குடிநீர் எடுக்க முடியாத நிலை ஈரோடு மாவட்டத்தில் நிலவி வருகிறது. ஈரோடு மாவட்ட காவிரி ஆற்று பகுதியில் தேங்கியுள்ள சாய கழிவு நீரை சுத்திகரிப்பதற்கு அரசிடம் எந்த திட்டமும் இல்லை இதற்கு தீர்வு காணும் எண்ணமும் அரசுக்கு இல்லை.
ராஜினாமா செய்யத் தயாரா?: எனவே, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஈரோடு சாயக் கழிவுநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஓர் ஆண்டில் தீர்க்கப்படும் என உறுதி அளிக்கும் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்துவோம். இல்லாவிடில் ஓராண்டில் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மக்கள் இயக்கங்களோடு இணைந்து போராடுவேன் என வாக்குறுதியை வெளிப்படையாகவும் உறுதியாகவும் உறுதிமொழி படிவத்தில் கையொப்பமிட வேண்டும். மறுக்கும் வேட்பாளர்களை ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் புறக்கணிக்க வேண்டும்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய முகிலன், "காவிரி ஆற்றில் கடந்த 5 ஆண்டுகளாக, மருத்துவக் கழிவுகள் இருப்பதாக ஐஐடி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. இதனால் பாதிப்புகள் ஏற்படாமல் இருப்பதற்கு காரணம், ஆற்றில் மணல் இருப்பு உள்ளது தான். அதனை தற்போது தமிழ்நாடு அரசு மணல் அள்ளுவதற்கு விதிமுறைகளை தளர்த்தி அனுமதி அளித்திருப்பதால், மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக உள்ள மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டிற்கு தேவையான மணல் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும் என பதிவிட்டு இருந்தார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த 2008 ஆம் ஆண்டு துவக்கிய திட்டம் எனவும் சுட்டிக்காட்டி இருந்தார். தற்போது ஆட்சி பொறுப்பு ஏற்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆற்று மணல் அள்ளுவதற்கு தடை விதித்து வெளிநாடுகளில் இருந்து மணலை இறக்குமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: ஈரோடு இடைத்தேர்தலில் பின்வாங்கிய அமமுக.. டிடிவி தினகரன் கூறிய காரணம் என்ன?