கரூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைத் தீர்ப்பு முகாமில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன் தலைமையில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கரூர் மாவட்டத்திலுள்ள 335 கல் குவாரிகளில் டிஜிட்டல் முறையில் ட்ரோன் மூலம் ஆய்வு செய்யக் கோரி கோரிக்கை மனுவினை அளித்து உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் விஜயன், சட்டவிரோத கல் குவாரி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சண்முகம், தோழர் களம் அமைப்பின் தலைவர் சண்முகம், ராஜகோபால் உள்ளிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உடன் இருந்தனர்.
இது குறித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன் ஈடிவி பாரத் நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “கரூர் மாவட்டத்தில் உள்ள 335 கல்குவாரிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றம், கடந்த ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த நிலையில், தமிழக அரசாணை 19/2022 இன் படி அனைத்து குவாரிகளையும் மாதம் தோறும் வட்டாட்சியர் தலைமையில் 8 துறை அதிகாரிகள் கொண்ட குழு ஆய்வு செய்ய வேண்டும். இதே போல, கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் 11 துறைகள் கொண்ட அதிகாரிகள் தலைமையில் மாதம் ஒருமுறை ஆய்வு நடத்த வேண்டும்.
இது தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை கரூர் மாவட்ட ஆட்சியர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. முழுக்க முழுக்க கல்குவாரி உரிமையாளர்களுக்கு ஆதரவாக கரூர் மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். கரூர் பரமத்தி அருகே உள்ள என்.டி.சி கல்குவாரியில் சட்ட விதிமுறைகளை மீறி 300 அடி கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதால், அங்கு ராட்சத பாறை மேல் இருந்து சரிந்து விழுந்தது.
ஆட்சியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: இந்த விபத்தில் மூன்று நாட்கள் கழித்து லாரியில் சிக்கிய கல்குவாரி லாரி ஓட்டுநரை சடலமாக மீட்டனர். இதேப் போல ஏழு ஆண்டுகளாக சட்டவிரோதமாக இயங்கிய கல் குவாரி மீது புகார் அளிக்கப்பட்டதால் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ஜெகநாதன் வாகனம் ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னரும் அந்த கல்குவாரி மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் இதுவரை ஆட்சியர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை.
தமிழ்நாடு முதலமைச்சர் சமீபத்தில் டிஜிட்டல் முறையில் ட்ரோன் மூலம் தமிழகம் முழுவதும் இயங்கும் கல் குவாரிகளை ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். இதே போல கனிமவளத்துறை ஆணையர் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் கல்குவாரிகள் ஆய்வினை டிஜிட்டல் முறையில் ட்ரோன் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். கரூர் மாவட்டத்தில் கடந்த வாரம் 12 குவாரிகளில் அபராதம் விதிக்கப்பட்டது.
ஆட்சியர், கல்குவாரி உரிமையாளர்களை கண்டு அச்சப்படுகிறாரோ: இது தொடர்பாக, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நேரடியாக மக்கள் செய்தி தொடர்பு மூலம் அறிக்கையை வெளியிடாமல், தனது பெயர் குறிப்பிடாமல் அபராத குறிப்பு அடங்கிய தகவலை கசிய விட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர், கல்குவாரி உரிமையாளர்களை கண்டு அச்சப்படுகிறாரோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நீதிமன்ற உத்தரவினால் கல்குவாரி ஆய்வு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளான கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கண் துடைப்பு நடவடிக்கையாக குறைந்த அளவு அபராத தொகையை விதித்துள்ளார்.
அரசு விதிமுறைப்படி சட்டவிரோதமாக விதிமுறைகள் மீறிய கல் குவாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டால் பல கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் கிடைக்கும். அபராதம் விதிக்கப்பட்ட 12 கல் குவாரிகளில் ஸ்ரீரங்கம் திமுக எம்எல்ஏ பழனியாண்டி கல்குவாரியில் மட்டுமே டிஜிட்டல் முறையில் சோதனை நடத்தி அபராதம் விதித்துள்ளனர். மற்ற கல்குவாரிகளில் சாதாரண முறையில் ஆய்வு செய்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் முறையில் ஆய்வு செய்வது சட்ட விதிமுறை: அரசின் கொள்கை முடிவை எதிர்த்து கல்குவாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் தனிப்பட்ட முறையில் டிஜிட்டல் முறையில் சோதனை செய்து அபராதம் விதிக்க வேண்டும் என கூறவில்லை. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு, தமிழக முதலமைச்சர் உத்தரவு, கனிமவளத்துறை ஆணையர் உத்தரவு ஆகியவற்றின் மூலமே டிஜிட்டல் முறையில் கல்குவாரிகளில் ஆய்வு நடத்தி விதிமுறை மீறல்கள் குறித்து அபராதம் விதிக்க வேண்டும் என சட்ட விதிமுறை உள்ளது.
கரூர் மாவட்டத்தில் இயங்கும் 335 கல்குவாரிகளிலும் டிஜிட்டல் முறையில் ஆய்வு செய்ய கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் நடைமுறைப்படுத்த தயக்கம் காட்டி வருகிறார். எனவே அபராதம் விதிக்கப்பட்ட 11 கல் குவாரிகளிலும் மீண்டும் டிஜிட்டல் முறையில் மறு ஆய்வு செய்து அபராதம் விதிக்க வேண்டும் என கரூர் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
மணல் மாஃபியாக்கள்: மேலும் விழுப்புரம் மாவட்டம் ஏனாதிமங்கலம் பகுதியில் அரசு மணல் குவாரியில் விதிமுறை மீறல்கள் இருப்பது கண்டறியப்பட்டு கடந்த ஜூன் 30 ஆம் தேதி நீதிமன்றம், அரசு மணல் குவாரி இயங்க தடை விதித்துள்ளது. இதே போல கரூர் மாவட்டம் வாங்கல் அருகே உள்ள நன்னியூர், மல்லம்பாளையம் ஆகிய மணல் குவாரிகளில் சட்ட விதிமுறை மீறல்கள் நடைபெற்று வருகிறது. இந்த மணல் குவாரியை சுற்றி, சேகர் ரெட்டி மற்றும் திண்டுக்கல் ரத்தினம் போன்ற மணல் மாஃபியாக்கள் கட்டுப்பாட்டில் விதிமுறை மீறல்கள் நடைபெற்று மணல் அள்ளப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டத்தில் கனிமவளக் கொள்ளை, மணல் கொள்ளை அதிக அளவில் நடைபெறுகிறது. இது தொடர்பாக பத்துக்கும் மேற்பட்ட புகார்கள் நேரடியாக கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கப்பட்டுள்ளது. ஏனாதிமங்கலம் அரசு மணல் குவாரியில் மீறப்பட்ட விதிமுறை மீறல்களை விட அதிக அளவில் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மணல் குவாரிகளில் விதிமுறை மீறல்கள் நடைபெற்று வருகிறது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரூரில் மருத்துவக்கழிவுகளால் அவதியுறும் மக்கள்.. நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?