கரூர்: ராஜராஜ சோழன் குறித்து இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்த கருத்துக்கு தமிழ்நாடு அளவில் எதிர்ப்பும் ஆதரவும் அதிகரித்துள்ளது.
இதனிடையே காங்கிரஸ் கட்சியின் கரூர் எம்.பி ஜோதிமணி தனது முகநூல் பக்கத்தில் வெற்றிமாறனுக்கு ஆதரவாக பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழன் ஒரு தமிழ் பேரரசன். நம்பிக்கையில் சைவர். தமிழில் சங்க, சைவ, வைணவ இலக்கியங்கள் உண்டு. இந்து இலக்கியம் என்று எதுவும் இல்லை. பாஜகவிற்கு தமிழ்நாடு வரலாற்றைப் பற்றி எவ்வித அறிவும், அக்கறையும் இல்லை. மதவெறி மட்டுமே பிரதானமாக உள்ளது.
சினிமா உட்பட எந்தக் கலைவடிவமும் அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க முடியாது. இயக்குனர் வெற்றிமாறன் அவர்களின் கருத்து சரியானதே என்று ஜோதிமணி குறிப்பிட்டுள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், ராஜராஜ சோழன் குறித்த விவாதம் சமூக வலைதளங்களிலும் மிகப்பெரிய பேசு பொருளாக மாறி உள்ளது.
இயக்குனர் மணிரத்தினம், எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலின் கதைக்களத்தை மையமாகக் கொண்டு இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் தற்பொழுது திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. பாகம்-2, 2023ஆம் ஆண்டு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ள நிலையில் தற்போது தஞ்சை ஆண்ட சோழ மன்னன் ராஜராஜன் குறித்து இந்து அமைப்புகள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ள கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:விஜயதசமியன்று மாணவ சேர்க்கைக்காக பள்ளிகளைத் திறப்பதற்கு அறிக்கை வெளியிடாத பள்ளிக்கல்வித்துறை!