கரூர் மாவட்டத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் நோக்கில் ஹெல்ப் ஆஃப் கரூர் பிரீத் எனும் இயக்கத்தை தொடங்கிய கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி நிதி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். அதன்படி 198 பேர் வழங்கிய நிதி உதவியால் ரூ. 10 லட்சத்து 20 ஆயிரம் பணம் சேர்ந்தது.
இதனைக் கொண்டு ஒரே நேரத்தில் இருபது கரோனா நோயாளிகளுக்கு பயன்படக்கூடிய வகையில் பத்து ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வாங்கப்பட்டது. மேலும் மாற்றம் தொண்டு நிறுவனம் மூலம் ஒரு ஆக்ஸிஜன் செறிவூட்டி நன்கொடையாக பெறப்பட்டது. பெறப்பட்ட 11 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளும் கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி வழங்கினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “சமூக வலைதளங்கள் மூலமாக ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வாங்குவதற்காக நிதி திரட்டப்பட்டது. இதன் மூலம் திரட்டப்பட்ட ரூ.10 லட்சத்து 20 ஆயிரம் கொண்டு வாங்கப்பட்ட ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை, கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வரிடம் ஒப்படைத்திருக்கிறோம்.
கரூர் மாவட்டத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு மேலும், மேலும் நீட்டிக்கப்பட்டால் தினக் கூலிகளான எளிய மக்கள் உணவுக்காக போராட வேண்டிய நிலை ஏற்படும்" என்றார்
இதையும் படிங்க : 20 கோடியைக் கடந்த தடுப்பூசி பயனாளர்களின் எண்ணிக்கை!