கரூர்: வெங்கமேடு பகுதியில் பூட்டிய வீட்டில் தாய், மகன் ஆகிய இருவரும் தூக்கில் இறந்த நிலையில் கிடந்தது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், வெங்கமேடு பகுதியினை அடுத்த அருகம்பாளையம் நேதாஜிநகர் பகுதியைச் சேர்ந்தவர் பூங்கொடி (45). இவரது கணவர் ஞானசேகரன் (55). இவர், அப்பகுதியில் உள்ள தையல் கடையில் பணிபுரிந்துவருகிறார். வழக்கம்போல் பணிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பினார். வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்றபோது, அவரது மனைவி பூங்கொடியும், மகன் சரண் (23) ஆகிய இருவரும் தூக்கில் தொங்கியவாறு இறந்த நிலையில் கிடந்தனர்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஞானசேகரன், வெங்கமேடு காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து விசாரணை மேற்கொண்டத்தில், நீண்ட காலமாக பூங்கொடி சுவாசப் பிரச்னையாலும், இவரது மகன் சரண் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், இவர்களின் சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ செலவிற்கு வசதியில்லை என்ற நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என, காவல்துறையினர் கருதுகின்றனர்.
இருப்பினும், தற்கொலையால் இருவரும் உயிரிழந்துள்ளனரா அல்லது வேறு ஏதேனும் பிரச்னையில் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டனரா என்ற கோணத்தில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். கரூரில் உள்ள தனியார் அறிவியல் கலைக்கல்லூரியில், சரண் எம்.எஸ்.இ இரண்டாம் ஆண்டு பயின்றுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தாய், மகன் இருவரும் இறந்தது அப்பகுதியினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.