கரூர்: குளித்தலை காவேரி நகர் என்.ஜி.ஜி.ஓ காலனி பகுதியைச் சேர்ந்தவர் கலைமணி (52). இவர் தாலியம்பட்டி பகுதியில் செயல்பட்டுவரும் குளித்தலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். குளித்தலை எஸ்பிஐ வங்கிக் கிளையில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி எஸ்பிஐ வங்கி மேலாளர் பேசுவதாக இவரது செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது.
எஸ்பிஐ வங்கி மேலாளர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த நபர், பான் கார்டு எண் வங்கி கணக்கில் இணைக்க விவரங்களை கலைமணியிடம் கேட்டுள்ளார். அப்பொழுது தகவல்களை தர மறுத்து தான் அவசரமாக பால் வாங்க வெளியே செல்ல இருப்பதாக கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார். அதன் பின்னர் அருகாமையில் உள்ள கடைக்கு பால் வாங்குவதற்காக சென்றுள்ளார்.
அந்த நேரத்தில் அவரது மகள் அக்ஷயா செல்போனை பயன்படுத்தியபோது, குறுஞ்செய்தியில் வந்த லிங்கை கிளிக் செய்துள்ளார். அதன் மூலம் ஓடிபி எண்ணை சமர்ப்பித்து வங்கி விவரங்களை அளித்துள்ளார். பிறகு ஐந்து நாட்கள் கழித்து, ஏப்ரல் 15ஆம் தேதி எல்ஐசி பிரீமியத் தொகை செலுத்துவதற்காக எஸ்பிஐ வங்கியில் உள்ள கணக்கில் இருப்புத் தொகையை பார்த்து உள்ளார்.
இன்டர்நெட் பேங்கிங் மூலம் ரூ 2,99,900 எச்டிஎப்சி கிரெடிட் கார்டு கணக்கு ஒன்றுக்கு பணம் மாற்றப்பட்டுள்ளதாகவும், அதன் பிறகு மீண்டும் அதே வங்கி கணக்கில் இருந்து மேலும் ரூ.25ஆயிரம் ரூபாய் இன்டர்நெட் பேங்கிங் மூலம் பணம் எடுக்கப்பட்டதால் ஆசிரியை கலைமணி அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து வங்கியில் விசாரித்தபோது வங்கி மேலாளர் காவல்துறையில் புகார் அளிக்க அறிவுறுத்தியுள்ளார். இதன் பேரில், தனது வங்கிக் கணக்கில் இருந்து 3 லட்சத்து 24 ஆயிரத்து 990 திருடப்பட்டு இருப்பது குறித்து கரூர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
இந்த புகார் அடிப்படையில் கரூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அம்சவேணி இணையதளம் மூலம் வங்கி கணக்கிலிருந்து வாடிக்கையாளர்கள் தெரியாமல் இன்டர்நெட் மூலம் பணத்தை எடுத்த அடையாளம் தெரியாத நபர் குறித்து விசாரித்து வருகிறார்.
சமீபகாலமாக இணையவழி குற்றங்கள் அதிகரித்து வருவதற்கு பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணம். மேலும் செல்போன் மூலம் அடையாளம் தெரியாத நபர்களிடம் வங்கி கணக்கு ஆதார் எண், பான் கார்டு எண் ஆகிய விவரங்களை தெரிவிக்கக்கூடாது. போதிய விழிப்புணர்வோடு இருந்தால் மட்டுமே ஏமாற்றத்தை தவிர்க்க முடியும் என குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர். மேலும் இணைய வழி குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு 1930 என்ற இலவச எண்ணில் புகார் அளிக்கலாம் எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சொத்துதான் பிரச்சினை.. தந்தை கொன்று புதைப்பு.. போலீசுக்கு டிமிக்கி கொடுத்த மகன் நீதிமன்றத்தில் சரண்!