தமிழ்நாடு முழுவதும் மின் கட்டண உயர்வைக் கண்டித்து திமுகவினர் அவரவர் வீடுகளின் முன்பு கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில் பாலாஜி கரூரை அடுத்த ராமேஸ்வரம் பட்டியில் உள்ள தனது வீட்டின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். மின் கட்டண உயர்வுக்கு எதிராகப் பதாகைகள் ஏந்தி கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி, "அரசு மின் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்தி, வசூல் செய்து வருவது அடாவடித்தனமாகும். மின் கட்டணம் செலுத்த மற்ற மாநிலங்கள் சலுகை வழங்கிவருவதுபோல் தமிழ்நாட்டிலும் சலுகை வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு கரோனா நிவாரண நிதியாக மக்களுக்கு வழங்கிய ஆயிரம் ரூபாயைத் தற்போது மின் கட்டணம் என்ற பெயரில் கூடுதலாக வசூல் செய்துவருகிறது.
மின்சாரக் கணக்கீடு குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் மூன்று மாத கால இடைவெளிக்குப் பிறகு மின் கட்டணத்தைக் கட்டலாம் என மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி கூறுவது மெத்தனப்போக்காகும். மின்சாரக் கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்தியிருப்பது சிறந்த அமைச்சருக்கான செயல் அல்ல" என்றார்.
இதையும் படிங்க; மின் கட்டணம் உயர்வு - கருப்புக் கொடி ஏந்தி திமுக ஆர்ப்பாட்டம்