கரூர்: திருமாநிலையூரில் இன்று (ஜூலை 2) நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் 80,943 பயனாளிகளுக்கு ரூ.1,110 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தொடர்ந்து விழா மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி 2 வீர வாள்களை நினைவுப்பரிசாக வழங்கி சிறப்பித்தார். பின்னர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நபார்டு கிராம சாலைகள் மூலம் 12 புதிய சாலைகள், மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, கூட்டுறவுத்துறை, நீர்வளத்துறை, வேளாண்மை, பொறியியல் துறை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட துறைகளில் நிறைவுபெற்ற ரூ.28.60 கோடி மதிப்பீட்டில், 95 திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
![கரூரில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15717101_krr.jpg)
![பணி நியமன ஆணைகளை வழங்கிய மு.க.ஸ்டாலின்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15717101_thmbnail_3x2_krr.png)
மேலும், மாவட்டத்தில் ரூ.581.44 கோடி மதிப்பீட்டில் 99 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, கூட்டுறவுத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கால்நடை பராமரிப்புத்துறை, மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட துறைகளின்கீழ் ரூ.500.83 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை சுமார் 80,750 பயனாளிகளுக்கு வழங்கினார்.
![மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி 2 வீர வாள்கள் நினைவு பரிசு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-krr-02-cm-mkstalin-ingarated-karur-district-new-99scheme-start-and-opening-new-95-govt-scheme-news-vis-scr-tn10050_02072022135557_0207f_1656750357_417.jpg)
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் திருமாநிலையூர் விழா மேடை வரை மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்பாட்டில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், சிவகாமசுந்தரி, மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், கரூர் மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 'படித்த முட்டாள்.. நோட்டாவோடு போட்டி.. வேலை வெட்டி இல்லையா?' - அண்ணாமலையை வசைபாடிய செந்தில் பாலாஜி